செய்திகள்

உள்கட்சி தேர்தல் மூலம் தலைவர் ஆவதையே ராகுல் காந்தி விரும்புகிறார்: வீரப்ப மொய்லி

Published On 2017-09-15 10:49 GMT   |   Update On 2017-09-15 10:49 GMT
உள்கட்சி தேர்தல் மூலம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆவதையே ராகுல் காந்தி விரும்புகிறார் என மூத்த தலைவர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்:

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தியும், துணை தலைவராக ராகுல் காந்தியும் இருந்து வருகின்றனர். சமீப காலமாக சோனியா காந்திக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கட்சி கூட்டங்கள் உள்பட முக்கிய கூட்டங்களில் அவரால் பங்கேற்க முடிவதில்லை. எனவே ராகுல் காந்தியை தலைவராக நியமனம் செய்ய வேண்டும் என கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், சோனியா காந்தி அப்படி நியமனம் செய்யவில்லை.

இந்நிலையில், உள்கட்சி தேர்தல் மூலம் கட்சி தலைவர் ஆகவேண்டுமென ராகுல் விரும்புகிறார் என கர்நாடக மாநில முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:


 
ராகுல் காந்தி உடனடியாக தலைவர் பதவி ஏற்பது கட்சிக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது. ஆனால், அவர் தலைவர் ஆவதை தாமதம் செய்துவருகிறார். அவர் கட்சி தேர்தலை எதிர்பார்த்துள்ளார். கட்சியினர் மூலம் தலைவராக தேர்வு செய்யப்படுவதையே அவர் விரும்புகிறார்.
  
இந்த மாத இறுதிக்குள் உள்கட்சி தேர்தல் முடிந்துவிடும் என நினைக்கிறேன். இதை தொடர்ந்து அவர் அடுத்த மாதம் தலைவர் பதவி ஏற்பார். ராகுல் காந்தி புதிய அணுகுமுறையை கொண்டவர். புதிய யோசனைகளை தெரிவித்து வருகிறார். எனவே அவரது தலைமையில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் வலிமை பெறும்.

கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். இனி பா.ஜ.க. திரும்பி வரும் என்ற பேச்சுக்கே இடமில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News