செய்திகள்

இந்தியா- ஜப்பான் இடையே 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின

Published On 2017-09-14 10:15 GMT   |   Update On 2017-09-14 10:15 GMT
குஜராத மாநிலம் அகமதாபாத்தில் இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகள் இடையே 15 ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகின.
அகமதாபாத்:

ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே நேற்று இந்தியாவுக்கு வந்தார். அவருக்கு பிரதமர் மோடி மற்றும் அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதையடுத்து இரு நாட்டு பிரதமர்களும் மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்தை பார்வையிட்டனர்.

இதற்கிடையே, மும்பை - அகமதாபாத் இடையேயான புல்லட் ரெயில் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் மோடி மற்றும் அபே இருவரும் இணைந்து திட்டத்திற்கான அடிக்கல்லை நாட்டினர்.

இந்நிலையில், குஜராத் மாநிலம் காந்தி நகரில் இந்தியா-ஜப்பான் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. கடற்படை, வர்த்தகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட 15 ஒப்பந்தங்களில் பிரதமர் மோடியும், ஷின்ஸோ அபேவும் கையெழுத்திட்டனர்.



இதைதொடர்ந்து, இரு நாட்டு பிரதமர்களும் கூட்டறிக்கை விடுத்தனர். அதில், மலபார் பகுதியில் முதன்முதலாக இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்க கடற்படை இணைந்து செயல்படும்.  இதனால் இந்தியாவுடனான உறவு மேலும் வலுப்படும்.

வட கொரியா தொடர்ந்து நடத்தி வரும் அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளுக்கு  இந்தியா, ஜப்பான் ஆகியவை தங்களது எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறது. மும்பை மற்றும் பதான்கோட்டில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து, பிரதமர் மோடி பேசுகையில், ‘2016-17-ஆம் ஆண்டில் ஜப்பான் 4.7 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 80 சதவீதம் அதிகம். இந்தியா மற்றும் ஜப்பானுக்கு இடையேயான ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இதனால் இந்தியா மற்றும் ஜப்பான் இடையே உறவு வலுப்படும். இந்தியாவில் எளிதில் தொழில் தொடங்கும் வகையில் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்திய தபால் துறை மற்றும் ஜப்பான் தபால் துறை ஆகியவை இணைந்து செயல்பட உள்ளது. இதனால் இந்தியாவில் வாழும் ஜப்பானியர்கள் தங்களுக்கு பிடித்தமான ஜப்பானிய உணவு வகைகளை ஆர்டர் செய்து சாப்பிட முடியும். மேலும், இந்தியாவில் அதிக அளவிலான ஜப்பானிய ஓட்டல்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.



இதுதொடர்பாக ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே பேசுகையில், உங்களின் சிறப்பான வரவேற்புக்கு நன்றி.  பிரதமர் மோடி எடுத்து வரும் மேக் இன் இந்தியா மற்றும் டிஜிட்டல் இந்தியா உள்ளிட்ட பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஜப்பான் ஆதரவு அளிக்கும் என தெரிவித்தார்.
Tags:    

Similar News