செய்திகள்

மோடி பிறந்த நாளில் உ.பி. அரசு திட்டம்: பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் பள்ளிகளுக்கு சென்று பிரசாரம்

Published On 2017-09-08 09:31 GMT   |   Update On 2017-09-08 09:31 GMT
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் பள்ளிகளுக்கு சென்று சாதனைகளை விளக்கி பிரசாரம் செய்ய உத்தரப்பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது.
புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் வருகிற 17-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தை தனித்தன்மையுடன் கொண்டாட உத்தரபிரதேச மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

தற்போது அங்குள்ள 403 எம்.எல்.ஏ.க்களில் 311 பேர் பா.ஜனதா கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி அரசு தொடக்க பள்ளிகளுக்கு செல்ல வேண்டும்.

அங்கு மாணவ- மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட வேண்டும். அது மட்டுமின்றி பள்ளி குழந்தைகளுடன் தங்கி அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பற்றியும், அவர் கொண்டு வந்து நிறைவேற்றி வரும் தூய்மை இந்தியா உள்ளிட்ட தொலை நோக்கு திட்டங்கள் குறித்தும் விளக்கி பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்.

இந்த ஆண்டு மோடியின் பிறந்த நாள் வருகிற 17-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. எனவே 16 அல்லது 18-ந்தேதி பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுடன் பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என எம்.எல்.ஏ.க்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இத்தகவலை மாநில தொழில் வளர்ச்சி துறை மந்திரி சதீஷ் மாகானா தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் மட்டுமின்றி அனைத்து மூத்த அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டவர்களும் சென்று மாணவர்களிடம் பிரதமரின் திட்டங்கள் குறித்தும் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்.

மதிய உணவு திட்டம் அமல்படுத்தப்பட்டும் துரதிருஷ்டவசமாக உத்தரபிரதேசத்தில் கடந்த 15 ஆண்டுகளாக அரசு பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அங்கு போதிய கட்டுமான வசதிகள், அடிப்படை வசதிகள் இல்லை. எனவே மாணவர்களுடன் தங்கியிருக்கும் எம்.எல்.ஏ.க்கள் அவர்களுக்கு தேவைப்படும் வசதிகளை செய்து தர வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டம் குறித்து உத்தரபிரதேச பா.ஜனதா செய்தி தொடர்பாளர் சந்திரமோகன் கூறும் போது, பிரதமர் மோடி மற்றும் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோரால் இத்திட்டம் முடிவு செய்யப்பட்டது.

‘நாட்டின் எதிர்காலமே குழந்தைகள் தான். எனவே அவர்களுக்கு நாட்டின் எதிர்காலம் மற்றும் அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பது நமது கடமை. மேலும் எம்.எல்.ஏ.க்கள் பள்ளிகளுக்கு தொடர்ந்து செல்வதன் மூலம் நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களின் பணியை கண்காணிக்கவும் முடியும். பள்ளிக்கு தேவையான வசதிகளையும் செய்து தர முடியும் என்றார்.
Tags:    

Similar News