செய்திகள்

ராஜஸ்தான்: 2 மாதத்தில் 90 குழந்தைகள் மரணம் - 3 டாக்டர்கள் இடைநீக்கம்

Published On 2017-09-04 18:10 GMT   |   Update On 2017-09-04 18:10 GMT
ராஜஸ்தானில் அரசு மருத்துவமனையில் கடந்த இரண்டு மாதத்தில் 90 குழந்தைகள் மரணமடைந்த சம்பவம் தொடர்பாக மூன்று டாக்டர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 5 பேரின் பெயர்கள் காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலத்தின் பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் கடந்த இரண்டு மாதத்தில் 90 குழந்தைகள் மரணமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு மூன்று நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில சுகாதாரத்துறை மந்திரி காளிசரண் சரப் உத்தரவிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை மாநில அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, அம்மருத்துவமனை அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அம்மருத்துவமனை முதல்வர் உட்பட மூன்று டாக்டர்களை மாநில அரசு பணி இடைநீக்கம் செய்துள்ளது. மேலும் ஐந்து டாக்டர்களின் பெயர்கள் காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. நான்கு செவிலியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுகளை மாநில சுகாதாரத்துறை மந்திரி காளிசரண் சரப் பிறப்பித்தார். அதன்படி, முதன்மை மருத்துவ அதிகாரியும் மருத்துவமனை முதல்வருமான வி.கே.ஜெயின், பெண்கள் சிறப்பு மருத்துவர் பி.சி.யாதவ் மற்றும் மகப்பேறு பிரிவின் முதன்மை மருத்துவ அதிகாரியான ஜிதேந்திர பஞ்சாரா ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

மேலும் மணிஷா சவுத்ரி, திவ்யா பதக், ஒ.பி.உபதயா, ஜெய்ஸ்ரீ ஜெயின் மற்றும் ஷாலினி நனாவதி ஆகியோரின் பெயர்கள் காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்பட்டது. அதோடு நான்கு செவிலியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், இந்த விசாரணை விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
Tags:    

Similar News