செய்திகள்

நீல திமிங்கல விளையாட்டுக்கு அடிமையாகி தற்கொலைக்கு முயன்ற 10-ம் வகுப்பு மாணவன் மீட்பு

Published On 2017-08-27 00:28 GMT   |   Update On 2017-08-27 00:28 GMT
நீல திமிங்கல விளையாட்டுக்கு அடிமையாகி தற்கொலைக்கு முயன்ற ஜெய்ப்பூரை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன், மும்பையில் பத்திரமாக மீட்கப்பட்டான்.
மும்பை:

நீல திமிங்கல விளையாட்டுக்கு அடிமையாகி தற்கொலைக்கு முயன்ற ஜெய்ப்பூரை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன், மும்பையில் பத்திரமாக மீட்கப்பட்டான்.

நாடு முழுவதும் தற்போது பரபரப்பாக பேசப்படுவது ‘புளூ வேல்’ எனப்படும் நீல திமிங்கல விளையாட்டு. செல்போனில் பதிவிறக்கம் செய்து ஆன்லைனில் விளையாடப்படும் இந்த விளையாட்டு, விளையாடுபவர்களின் உயிருக்கு உலைவைக்கிறது.

இந்தநிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பெற்றோருக்கு தெரியாமல் நீல திமிங்கல விளையாட்டை விளையாடி வந்த 10-ம் வகுப்பு மாணவன், கடந்த திங்கட்கிழமை திடீரென மாயமானான். இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உள்ளூர் போலீசில் புகார் செய்தனர்.



சிறுவனின் செல்போன் எண்ணை வைத்து மேற்கொண்ட விசாரணையில், அவன் மும்பை சர்ச்கேட்டில் இருப்பது கண்டறியப்பட்டது.

உடனடியாக மும்பை வந்த போலீசார், நேற்று முன்தினம் நள்ளிரவு அவனை பத்திரமாக மீட்டனர். அவன் வசம் இருந்த கத்தியை பறிமுதல் செய்தனர். விசாரணையில், நீல திமிங்கல விளையாட்டின் இறுதிகட்டத்தை தான் எட்டியதாகவும், அதன் வலியுறுத்தலுக்கு இணங்க கத்தியுடன் ரெயிலில் மும்பை வந்து தற்கொலை செய்துகொள்ள தீர்மானித்ததாகவும் குண்டை தூக்கிப்போட்டான்.

போலீசார் அவனுக்கு புத்திமதி கூறி, பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். 
Tags:    

Similar News