செய்திகள்

டெல்லி: மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற பள்ளி மாணவன் - ‘புளூ வேல்’ விளையாட்டு காரணமா?

Published On 2017-08-19 22:20 GMT   |   Update On 2017-08-19 22:20 GMT
தலைநகர் டெல்லியில் பள்ளி மாணவன் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவத்திற்கு ‘புளூ வேல்’ விளையாட்டு காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் பள்ளி மாணவன் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவத்திற்கு ‘புளூ வேல்’ விளையாட்டு காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீப காலமாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஆன்லைன் விளையாட்டான ‘புளூ வேல்’ 50 நாள்கள் வரை நடைபெறும் விளையாட்டாகும். இதில் விளையாட்டில் பங்கேற்பவர்களுக்குச் சில சவால்கள் கொடுக்கப்படுகிறது. முதலில் எளிதான சவால்கள் இருக்கும். பின்னர் டிக்கெட் இல்லாமல் பஸ், ரயிலில் பயணிப்பது என்று சவால் வலுக்கும்.

பின்னர், தங்கள் கைகளில் கத்தியால் கீறிக் கொள்வது உள்ளிட்ட கொடூரமான செயல்களில் ஈடுபடுமாறு பணிக்கப்படுகின்றனர். அதன் இறுதியில் கொடூரமான முறையில் தற்கொலை செய்து கொள்ளுமாறு உத்தரவிடப்படுகிறது. அதை ஏற்று வெளிநாடுகளில் சுமார் 130 சிறுவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

அதன் தொடர்ச்சியாக, நம் நாட்டிலும் 'புளூவேல்' விளையாட்டு சிறுவர்களை ஈர்க்கத் தொடங்கியது. மும்பை, மேற்கு வங்காளம், மணிப்பூர் மற்றும் கேரளாவில் பல மாணவர்கள் இந்த விளையாட்டில் ஈர்க்கப்பட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதனையடுத்து, இந்த விளையாட்டுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டது.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள அசோக் விகார் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவன் இரு தினங்களுக்கு முன்னர் தனது வீட்டு மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளான். ரத்த வெள்ளத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவனின் நிலை தற்போது முன்னேறியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தற்கொலைக்கு முன்னதாக தனது மொபைல், வாட்ச், பர்ஸ் ஆகியவற்றை மாணவன் கீழே எடுத்து வைத்து விட்டு குதித்துள்ளதால் இது ‘புளூ வேல்’ விளையாட்டின் தூண்டுதலாக இருக்குமோ என்று போலீசார் சந்தேகமடைந்துள்ளனர். நன்றாக படிக்கும் மாணவன் என பள்ளியில் ஆசிரியர்களும் கூறியுள்ளதால் தற்கொலை முயற்சிக்கு வேறு காரணம் இருக்க வாய்ப்பில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News