செய்திகள்

மத்திய அரசை கண்டித்து தலையில் காய்கறிகளை வைத்தபடி காங்கிரஸ் மகளிர் அணி நூதன போராட்டம்

Published On 2017-08-19 06:49 GMT   |   Update On 2017-08-19 06:49 GMT
திருவனந்தபுரத்தில் மத்திய அரசை கண்டித்து தலையில் காய்கறிகளை வைத்தபடி காங்கிரஸ் மகளிர் அணியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவனந்தபுரம்:

கேரள மகிளா காங்கிரஸ் சார்பில் மாநில தலைவர் பிந்து கிருஷ்ணா, தலைமையில் திருவனந்தபுரத்தில் உள்ள கேரள அரசு தலைமைச் செயலகம் முன் பேரணி- ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை கே.முரளீதரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பேசினார்.

வீட்டு சமையல் கியாசுக்கான விலையை உயர்த்தக்கூடாது. கியாஸ் மானியத்தை ரத்து செய்வதற்கான முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து முரளீதரன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

கேரளாவில் ஒணம் பண்டிகை நெருங்கி விட்ட நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அரசின் போனசும், முன் பணமும் விலைவாசி உயர்வுக்கே சரியாகும் நிலை உள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கள்ளச்சந்தையில் பொருட்களை விற்போர் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்சிக்கு வந்தால் அனைத்தையும் நிறைவேற்றுவோம் என்று கூறிய பாஜக தலைமையிலான மத்திய அரசு, சாதாரண மக்களை குறிவைத்து சமையல் கியாசுக்கான மானியத்தை ரத்து செய்ய முடிவெடுத்து உள்ளது.

அதே போல் மாதம் தோறும் கியாசுக்கான விலை உயர்த்தப்படும் என்று அறிவித்து இருப்பதை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். மக்களின் வரிப்பணத்தில் , மக்களுக்கு சேவையாற்ற வேண்டிய மத்திய அரசு மீண்டும் மீண்டும் சுமையை மக்கள் மீது சுமத்துகிறது.

சரக்கு சேவை வரி அமல்படுத்தப்பட்டால் விலைவாசி குறையும் என்று கூறினார்கள். ஆனால் விலைவாசி குறைந்த பாடில்லை. மத்திய அரசு மக்கள் விரோத போக்கை கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

போராட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் மகளிர் அணியினர் தங்கள் தலைகளில் காய்கறிகளை வைத்தபடி மத்திய அரசை கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பினார்கள். விலைவாசி உயர்வு தலைக்கு மேல் சென்றுவிட்டது என்பதை குறிக்கும் வகையில் அவர்கள் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News