செய்திகள்

கோர்ட்டு உத்தரவுகளை வலைத்தள பக்கத்தில் வெளியிட சென்னை ஐகோர்ட்டுக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவு

Published On 2017-08-17 22:11 GMT   |   Update On 2017-08-17 22:11 GMT
பொதுமக்களின் நலன் கருதி கோர்ட்டு உத்தரவுகளை சென்னை ஐகோர்ட்டு தனது வலைத்தள பக்கத்தில் வெளியிடவேண்டும் என்று மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டது.
புதுடெல்லி:

மத்திய தகவல் ஆணையத்தில் ஆர்.கே.ஜெயின் என்பவர் தாக்கல் செய்த ஒரு மனுவில், ஐகோர்ட்டு மற்றும் கீழ்க்கோர்ட்டுகள் பிறப்பிக்கும் உத்தரவுகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வெளியிட தகவல் அறியும் உரிமை சட்டத்தின் 4-வது பிரிவு வகை செய்கிறது என்றும், ஆனால் சென்னை ஐகோர்ட்டு பிறப்பிக்கும் பல உத்தரவுகள் ஐகோர்ட்டின் வலைத்தள பக்கத்தில் வெளியிடப்படுவது இல்லை என்றும் கூறி இருந்தார். எனவே, கோர்ட்டுகள் பிறப்பிக்கும் உத்தரவுகளை தனது வலைத்தள பக்கத்தில் வெளியிடுமாறு ஐகோர்ட்டுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கூறி இருந்தார்.


                                                               ஆர்.கே.மாதுர்

இந்த மனுவை பரிசீலித்த மத்திய தகவல் ஆணையர் ஆர்.கே.மாதுர், பொதுமக்களின் நலன் கருதி கீழ்க்கோர்ட்டுகள் மற்றும் நடுவர் மன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளை சென்னை ஐகோர்ட்டு தனது வலைத்தள பக்கத்தில் வெளியிடவேண்டும் என்று உத்தரவிட்டார். அப்படி அந்த உத்தரவுகளை வெளியிடுவது பொதுமக்கள், வழக்கு தொடர்வோர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பயன்அளிப்பதாகவும், உதவியாகவும் இருக்கும் என்றும் அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News