செய்திகள்

பா.ஜ.க.வின் அதிகார வெறியால் ஜனநாயகத்துக்கு பேராபத்து: மாயாவதி எச்சரிக்கை

Published On 2017-07-30 07:51 GMT   |   Update On 2017-07-30 07:51 GMT
பாரதிய ஜனதா கட்சியின் அதிகார வெறியால் ஜனநாயகத்துக்கு பேராபத்து ஏற்பட்டு வருகிறது என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி எச்சரித்து உள்ளார்.
லக்னோ:

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு தனது ஆட்சி அதிகாரத்தை மிக மோசமாக பயன்படுத்துகிறது. ஆரம்பத்தில் அவர்களுக்கு ஆட்சி அதிகாரம் மீது பேராசை இருந்தது. இப்போது அது வெறியாக மாறி இருக்கிறது. இதன் காரணமாக செய்யக்கூடாத வி‌ஷயங்களை எல்லாம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

கோவா, மணிப்பூர், பீகார் மாநிலங்களில் அத்துமீறல்களில் ஈடுபட்டனர். இப்போது குஜராத்திலும் அதே போன்ற நிலை உருவாகி உள்ளது.

இதனால்தான் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை அந்த மாநிலத்தில் இருந்து வெளியிடத்துக்கு அழைத்து செல்லும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.

கோவா, மணிப்பூரில் ஜனநாயகத்தை நசுக்கி விட்டு ஆட்சி அமைத்தார்கள். அதைத்தொடர்ந்து ஒவ்வொரு மாநிலமாக எல்லை மீறி செயல்படுகிறார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு ஜனநாயகத்தை இக்கட்டான நிலைக்கு தள்ளி சென்றுள்ளது. அவர்களுடைய அதிகார வெறி ஜனநாயகத்துக்கு பேராபத்தை ஏற்படுத்தி உள்ளது.

பீகார், குஜராத், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் அமலாக்கதுறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை போன்றவற்றை எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக ஏவி விட்டு அவர்களை முடக்க பார்க்கிறார்கள்.

ஒடிசா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருப்பதால் அங்கு மத்திய அரசு ஒடுக்கு முறைகளை கையாள்கிறது. அதாவது அதிகார தீவிரவாதம் ஏவப்பட்டுள்ளது.

பாரதிய ஜனதா அரசு தவறான கொள்கைகளை கையாள்வதுடன் தவறான வழியிலும் செல்கிறது. இதில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

இவ்வாறு மாயாவதி கூறியுள்ளார்.
Tags:    

Similar News