செய்திகள்

டெல்லி சட்டசபையில் ரகளை: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் மீது பேப்பர் ராக்கெட் வீச்சு

Published On 2017-06-28 13:20 GMT   |   Update On 2017-06-28 13:20 GMT
டெல்லி சட்டசபையில் இன்று அவை நேரத்தின் போது நுழைந்த இரு ஆசாமிகள் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் மீது பேப்பர் ராக்கெட்டை வீசினர். பதிலுக்கு அவர்களை எம்.எல்.ஏ.க்கள் தாக்கியதால் அவையில் பரபரப்பு நிலவியது.
புதுடெல்லி:

யூனியன் பிரதேசமான டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்து வருபவர் சத்யேந்திர ஜெயின். சமீபத்தில் இவர்மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், இது தொடர்பான விசாரணைக்கு முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், இன்று கூடிய டெல்லி சட்டசபையில் காலை அவை தொடங்கி நடைபெற்று வந்தது. அப்போது, சட்டசபையின் பார்வையாளர்கள் மாடத்திலிருந்த இரண்டு ஆசாமிகள் எழுந்து நின்று திடீரென கோஷம் எழுப்பினர். அதைதொடர்ந்து, அவர்கள் பொதுப்பணித்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் உட்கார்ந்திருந்த வரிசையை நோக்கி பேப்பரால் செய்யப்பட்ட ராக்கெட்டுகளை வீசினர். இதனால் சட்டசபையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பொதுப்பணித்துறை அமைச்சர் மீது எழுப்பப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு குறித்து முதல்வர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை கண்டிக்கும் வகையில் செய்திகள் அடங்கிய பேப்பரில் அந்த ராக்கெட்கள் செய்யப்பட்டு இருந்தன. 

இதையடுத்து, சட்டசபை பாதுகாவலர்கள் பார்வையாளர்கள் மாடத்துக்கு விரைந்து சென்று, அமைச்சர்கள் மீது ராக்கெட் வீசிய ஆசாமிகளை மடக்கி பிடித்தனர். அவர்களை அங்கிருந்து அழைத்துச் சென்று சட்டசபை வளாகத்தின் வெளியே கொண்டு சென்றனர்.

அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் சிலர் இரு ஆசாமிகளையும் தாக்க தொடங்கினர். இதில் ஒருவருக்கும் காயம் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த சட்டசபை போலீசார் அங்கு வந்து எம்.எல்.ஏக்களை சமாதானம் செய்தனர். அதன்பின், அந்த ஆசாமிகளை அங்கிருந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்.

இதற்கிடையே, சபாநாயகர் ராம்நிவாஸ் கோயல், ’சட்டசபையில் ரகளையில் ஈடுபட்ட இரு ஆசாமிகளுக்கும் ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது’ என உத்தரவிட்டார். அமைச்சர் மீது ராக்கெட் வீசிய ஆசாமிகளால் டெல்லி சட்டசபையில் அரை மணிநேரம் அவை நடவடிக்கை முடங்கியது.
Tags:    

Similar News