செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியம்: தமிழக - கர்நாடக முதல்வர்களை அழைத்து பேச மத்திய அரசு திட்டம்

Published On 2017-06-20 04:22 GMT   |   Update On 2017-06-20 04:22 GMT
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்சினை தொடர்பாக தமிழக-கர்நாடக முதல்-மந்திரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அறிக்கையை மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யும் என்று மந்திரி உமா பாரதி கூறினார்.
புதுடெல்லி:

மத்திய நீர் வளத்துறை மந்திரி உமா பாரதி நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், தமிழ்நாடு-கர்நாடகம் இடையேயான நதிநீர் பங்கீடு பிரச்சினையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும், மத்திய அரசு அதை செயல்படுத்த முயற்சி எதுவும் எடுக்காதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்து உமா பாரதி கூறியதாவது:-

மழைநீர் சேகரிப்பில் தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தும் முயற்சியாக, தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களின் முதல்-மந்திரிகளை மத்திய அரசு விரைவில் டெல்லிக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டு உள்ளது.

இரு மாநில முதல்-மந்திரிகள் இடையே நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில், அறிக்கை ஒன்றை தயாரித்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்து இருக்கிறது. அடுத்த மாதம் (ஜூலை) இந்த பிரச்சினை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது. அப்போது இந்த அறிக்கை தாக்கல் செய்யப்படும். அதன்பிறகு கோர்ட்டின் உத்தரவுக்கு ஏற்ப மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.

இவ்வாறு உமா பாரதி கூறினார்.



காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் ஜூலை 11-ந்தேதி விசாரணைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
Tags:    

Similar News