செய்திகள்

காஷ்மீரில் வன்முறை ஓய்ந்தால் தான் பேச்சுவார்த்தை நடத்த முடியும்: அமித்ஷா திட்டவட்ட அறிவிப்பு

Published On 2017-05-29 00:54 GMT   |   Update On 2017-05-29 00:54 GMT
காஷ்மீரில் கல்வீச்சு, வன்முறை சம்பவங்கள் ஓய்ந்தால் தான் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று பா.ஜனதா தலைவர் அமித்ஷா கூறினார்.
புதுடெல்லி:

காஷ்மீரில் கல்வீச்சு, வன்முறை சம்பவங்கள் ஓய்ந்தால் தான் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று பா.ஜனதா தலைவர் அமித்ஷா கூறினார்.

பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு 3 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி கட்சியின் தலைவர் அமித்ஷா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது காஷ்மீரில் கடந்த சில மாதங்களாக நடைபெற்றுவரும் கல்வீச்சு, வன்முறை சம்பவங்கள் பற்றி கேட்டபோது அவர் கூறியதாவது:-

காஷ்மீரில் இப்போது 6 மாதங்களாக நடந்துவரும் பாதுகாப்பு படையினர் மீதான கல்வீச்சு சம்பவத்தை வைத்து அங்குள்ள நிலைமையை மதிப்பிடக் கூடாது. 1989-ம் ஆண்டு முதல் 2017 மே மாதம் வரை நடைபெற்ற அனைத்து சம்பவங்களையும் பார்க்க வேண்டும்.



இந்த காலகட்டத்தில் இதுபோல 6 மாதங்கள், 8 மாதங்கள் அல்லது ஒரு வருடம் என பல வன்முறை சம்பவங்கள், பாதுகாப்பு படையினர் அவர்களை கட்டுப்படுத்துவதற்கு முன்பு நடந்துள்ளன. காஷ்மீர் தவிர்த்து ஜம்மு, லடாக் பகுதிகளில் உள்ளவர்களுக்கு நீதி கிடைத்து இருப்பதாக நான் நம்புகிறேன்.

அங்கு வன்முறை சம்பவங்கள் முடிவுக்கு வந்ததும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சூழ்நிலை ஏற்படுத்தப்படும். நாங்கள் ஒவ்வொருவருடனும் (பிரிவினைவாதிகள் உள்பட) பேசுவோம். கல்வீச்சு சம்பவங்கள் நீண்டு கொண்டே இருந்தால் பேச்சுவார்த்தை நடத்துவது இயலாது.

அவர்கள் கற்களை வீசிக் கொண்டிருக்கும்போது நாங்கள் அவர்களுக்கு மலர்களை கொடுக்க முடியாது. இதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

மாநில அரசு கட்டமைப்பு வளர்ச்சி பணிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளது. தொலைதூர பகுதிகளிலும் வளர்ச்சி பணிகளை செயல்படுத்துவதில் மாநில அரசு வெற்றி பெற்றுள்ளது.

இவ்வாறு அமித்ஷா கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது:-

2016-17-ம் ஆண்டில் அதிகமான உர உற்பத்தி, அதிகமான சமையல் எரிவாயு இணைப்பு வழங்குதல், நிலக்கரி, மின்சார உற்பத்தியில் சாதனை, அதிகமான தேசிய நெடுஞ்சாலைகள், ஊரக சாலைகள் போட்டது, வாகன உற்பத்தி, இதுவரை இல்லாத அளவுக்கு மென்பொருள் ஏற்றுமதி, இதுவரை இல்லாத அளவில் அந்நிய செலாவணி கையிருப்பு போன்றவை மத்திய அரசின் சாதனைகள்.

பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசின் சிறப்பான நிர்வாகத்தால் நாம் உலகிலேயே வேகமாக வளரும் நாடாக இருக்கிறோம். பெரிய அளவிலான பணவீக்கம் கட்டுப்பாட்டில் உள்ளது. நேரடி, மறைமுக வரிகள் மூலம் வளர்ச்சிவிகிதம் 20 சதவீதமாக உள்ளது. இது சுதந்திரம் பெற்ற பின்னர் வரலாற்று சாதனை.

32 கோடி மக்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக மானியம் செலுத்துவதன் மூலம் கள்ளச்சந்தை, இடைத்தரகு ஆகியவை ஒழிக்கப்பட்டு அரசுக்கு ரூ.50 ஆயிரம் கோடி சேமிப்பாக கிடைத்துள்ளது.

இவ்வாறு அமித்ஷா கூறினார். 
Tags:    

Similar News