செய்திகள்

இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை செய்தவர்கள் மீன் உணவுக்கும் தடை விதிப்பார்கள்: கேரள முதல்வர்

Published On 2017-05-26 23:33 GMT   |   Update On 2017-05-26 23:33 GMT
இறைச்சிக்காக இன்று மாடுகளை விற்க தடை செய்தவர்கள், நாளை மீன் உணவுக்கு தடை விதித்தாலும் விதிப்பார்கள் என கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கருத்து தெரிவித்தார்.
புதுடெல்லி:

இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு நேற்று திடீர் தடை விதித்தது. இதற்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் கண்டனம் தெரிவித்தார். அதில் அவர் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளதாவது:-

இந்தியாவில் இறைச்சிக்காக மாடுகளை சந்தைகளில் விற்கக்கூடாது என மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு ஆணை வெளியிட்டுள்ளது காட்டுமிராண்டித்தனமான முடிவு. இது நாட்டின் மத சார்பின்மைக்கு ஊறுவிளைவிக்கும்.

இதுவரை மாடுகளை வாகனங்களில் ஏற்றி சென்றவர்களை மதவாத அமைப்புகள் தாக்குதல் நடத்தி வந்தன. தற்போது இறைச்சிக்காக மாடுகளை விற்க ஒட்டுமொத்த தடை விதித்ததன் மூலம் மக்களுக்கு எதிரான தங்களுடைய ஆளுமையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது தெளிவாக தெரிகிறது.

மாடு இறைச்சியை நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் உண்டு வருகின்றனர். இந்த உத்தரவால் மக்களின் உணவு உரிமையை மத்திய அரசு பறித்து விட்டது. மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள மக்களுக்கு குறைவான விலையில் கிடைக்கும் சத்து உணவு அவர்களுக்கு கிடைக்காமல் போய்விடும்.

மத்திய அரசின் உத்தரவால் நாடு முழுவதும் பல லட்சம் பேரின் நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும். இறைச்சிக்காக இன்று மாடுகளை விற்க தடை செய்தவர்கள், நாளை மீன் உணவுக்கு தடை விதித்தாலும் விதிப்பார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News