செய்திகள்

செல்லாத நோட்டு அறிவிப்புக்கு பிறகு வரி வரம்புக்குள் வந்த 91 லட்சம் பேர்: அருண் ஜெட்லி தகவல்

Published On 2017-05-16 22:15 GMT   |   Update On 2017-05-16 22:15 GMT
பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை அடுத்து புதிதாக 91 லட்சம் பேர், வரி வரம்புக்குள் வந்து இருப்பதாக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்தார்.
புதுடெல்லி:

கடந்த ஆண்டு நவம்பர் 8-ந் தேதி, ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அதையடுத்து, புதிதாக 91 லட்சம் பேர், வரி வரம்புக்குள் வந்து இருப்பதாக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்தார்.

கருப்பு பண சொத்துகளை தெரிவிக்கும் திட்டம் தொடர்பான இணையதளத்தை நேற்று அவர் தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசுகையில், ‘வரி கணக்கு தாக்கல் செய்வோர் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று கருதுகிறேன். செல்லாத நோட்டு அறிவிப்பால், கணக்கில் காட்டப்படாத பணம் மறைந்ததுடன், மின்னணு பரிமாற்றம் அதிகரித்து இருப்பதுடன், ரொக்கத்தை பயன்படுத்துவதற்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. செல்லாத நோட்டு அறிவிப்புக்கு பிறகு, தனிநபர் வருமான வரி வசூல் அதிகரித்துள்ளது’ என்று கூறினார்.

செல்லாத நோட்டு அறிவிப்புக்கு பிறகு, ஆன்லைனில் வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் எண்ணிக்கை 22 சதவீதம் அதிகரித்து இருப்பதாக மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் சுஷில் சந்திரா தெரிவித்தார். வங்கியில் அதிகமான கருப்பு பணத்தை செலுத்தியவர்களில் 17 லட்சத்து 92 ஆயிரம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், கணக்கில் காட்டப்படாத ரூ.16 ஆயிரத்து 398 கோடி வருவாய் கண்டறியப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார். 
Tags:    

Similar News