செய்திகள்

மணிப்பூர் மாநிலத்தில் கண்ணி வெடியில் சிக்கி 2 ராணுவ வீரர்கள் பலி

Published On 2017-05-08 22:43 GMT   |   Update On 2017-05-08 22:43 GMT
மணிப்பூரில் சாலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடியில் சிக்கி ராணுவ வீரர்கள் 2 பேர் பலி ஆனார்கள். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
இம்பால்:

மணிப்பூரில் சாலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடியில் சிக்கி ராணுவ வீரர்கள் 2 பேர் பலி ஆனார்கள். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் சில பயங்கரவாத அமைப்புகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இவர்கள் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றனர். பயங்கரவாதிகளை ஒழிக்க மாநிலம் முழுவதும் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று அதிகாலையில் டெங்நவுபால் மாவட்டத்தில் 165-வது பிரதேச ராணுவ பிரிவை சேர்ந்த வீரர்கள் ரோந்து பணிக்காக ராணுவ வாகனங்களில் அணிவகுத்து சென்றுகொண்டிருந்தனர். அங்கு ஆசிய நெடுஞ்சாலையையொட்டி அமைந்திருக்கும் லோக்சாவ் என்ற கிராமத்தில் சாலையில் பயங்கரவாதிகள் கண்ணி வெடிகளை புதைத்து வைத்திருந்தனர்.

ராணுவ வாகனங்கள் அந்த சாலையை கடந்தபோது, கண்ணி வெடிகளில் சிக்கின. கண்ணி வெடிகள் வெடித்து சிதறியதில் ராணுவ வீரர்கள் 4 பேர் பலத்த காயம் அடைந்தனர். இதையடுத்து சக வீரர்கள் படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு ஹெலிகாப்டர் மூலம் அருகில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களில் 2 பேர் சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்தனர்.

கண்ணி வெடி தாக்குதலை தொடர்ந்து அங்கு பயங்கரவாதிகளை பிடிப்பதற்காக தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டு உள்ளது. ராணுவ வீரர்கள் மற்றும் மாநில போலீசார் ஒன்றிணைந்து தாக்குதல் நடந்த இடத்திற்கு அருகில் உள்ள காடுகளில் தீவிரமாக தேடிவருகின்றனர். 
Tags:    

Similar News