செய்திகள்

இரண்டு ஆண்டுகளுக்கு பின் குஜராத் சட்டசபைக்கு செல்கிறார் அமித் ஷா

Published On 2017-03-28 12:46 GMT   |   Update On 2017-03-28 12:46 GMT
குஜராத் மாநிலம் நாரன்புரா சட்டசபை உறுப்பினரான பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா இரண்டாண்டுகளுக்கு பின்னர் வரும் 30-ம் தேதி சட்டசபை நடவடிக்கைகளில் பங்கேற்க இருக்கிறார்.
அகமதாபாத்:

பா.ஜ.க தேசிய தலைவரான அமித் ஷா குஜராத் மாநிலம் நாரன்புரா சட்டசபை தொகுதியில் இருந்து கடந்த 2012-ம் ஆண்டு தேந்தெடுக்கப்பட்டவர். பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமான அமித் ஷா கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் பா.ஜ.க-வின் தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கட்சிப்பணி காரணமாக சட்டசபை நடவடிக்கைகளில் பங்கேற்காமல் இருந்த அமித் ஷா, இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் வரும் 30-ம் தேதி சட்டசபைக்கு செல்கிறார். கடைசியாக 2015-ம் ஆண்டு மார்ச் 16-ம் தேதி அவர் சட்டசபை நடவடிக்கையில் கலந்து கொண்டுள்ளார்.

சட்டசபை உறுப்பினர்களை பொறுத்த வரை 6 மாதங்கள் வரை சட்டசபை நடவடிக்கைகளில் இருந்து விடுப்பு எடுக்க முடியும் என்ற விதி இருந்தாலும், தகுந்த காரணங்களை கூறி விடுப்பை மேலும் நீட்டிக்க முடியும் என அம்மாநில சட்டசபை செயலாளர் தெரிவித்துள்ளார்.



உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்று ஆட்சியமைத்த பின்னர் அமித் ஷா தன்னுடைய சொந்த மாநிலமான குஜராத்துக்கு செல்ல இருப்பதால் அவரை வரவேற்க பா.ஜ.க.வினர் தயாராக உள்ளனர்.

இது குறித்து பேசிய மாநில பா.ஜ.க. தலைவர் ஜீது வாஹனி, “தேர்தல் வெற்றிக்கு பின்னர் குஜராத் வர இருக்கும் அமித் ஷாவை விமான நிலையத்தில் வைத்து கோலாகலமாக வரவேற்க இருக்கிறோம். மேலும், சட்டசபைக்கு வருகை தரும் அவரை சிறப்பான முறையில் வரவேற்க முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தயாராக இருக்கின்றனர்.” என்று கூறினார்.

குஜராத் மாநிலத்திற்கு செல்லும் அமித் ஷா சட்டசபையில் பங்கேற்பதோடு அங்கு வேறு சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள இருக்கிறார்.

Similar News