செய்திகள்

எல்லையை காக்கும் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தீபாவளியை கொண்டாடுங்கள்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

Published On 2016-10-23 05:51 GMT   |   Update On 2016-10-23 05:51 GMT
இந்தியாவின் எல்லைப்பகுதிகளை இரவும், பகலும் அயராதுழைத்து பாதுகாக்கும் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து இந்த தீபாவளியை கொண்டாடி மகிழுங்கள் என நாட்டு மக்களை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
புதுடெல்லி:

இதற்காக, ‘எனது அரசாங்கம்’ என்ற சமூகவலைத்தளம் மூலம் நரேந்திர மோடி என்ற ‘ஆப்’ வழியாக #Sandesh2Soldiers என்ற பிரசார இயக்கத்தை பிரதமர் மோடி துவக்கியுள்ளார்.

இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ள பிரதமர், ‘நமது வீரர்களுக்கு எனது தீபாவளி வாழ்த்துக்களை நான் தெரிவித்து விட்டேன். நமது நாட்டை பாதுகாக்கும் வீரர்களின் தீரத்தை நீங்களும் நினைவுகூர்ந்து தீபாவளி வாழ்த்துக்களை அனுப்பி வையுங்கள்.

125 கோடி மக்களும் அவர்களை வாழ்த்தினால், நமது வீரர்களின் பலம் 125 கோடி மடங்கு அதிகரிக்கும்’ என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் அகில இந்திய வானொலி நிலையமும் தபால் கார்டு வழியாக எல்லைப்பகுதிகளை காக்கும் வீரர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவிக்கும் வசதியை ஏற்படுத்தி உள்ளது.

இதுதவிர, இந்த வேண்டுகோளை வலியுறுத்தி ஒரு வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார். வெளியிட்ட சிலமணி நேரத்துக்குள் இந்த வீடியோ பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் ‘டிரெண்ட்’ ஆக மாறியுள்ளது.

கடந்த இரண்டு தீபாவளி திருநாள்களை ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி கொண்டாடியது நினைவிருக்கலாம்.



Similar News