உள்ளூர் செய்திகள்

மதுரையில் கந்துவட்டி கேட்டு பெண்களை மிரட்டிய 3 பேர் கைது

Published On 2022-06-14 07:58 GMT   |   Update On 2022-06-14 07:58 GMT
  • கந்து வட்டி தொடர்பாக புகார் கொடுத்த 2 பெண்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
  • தனிப்படை போலீசார் கந்து வட்டி கேட்டு மிரட்டிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை:

மதுரை பழைய குயவர்பாளையத்தை சேர்ந்த ஜேசுராஜா மனைவி ஜெர்மனி (வயது 43) மற்றும் காமராஜர்புரத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் மனைவி கீதா (52) ஆகியோர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளனர்.

இதுபற்றி உடனடியாக விசாரணை நடத்துமாறு போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதைதொடர்ந்து தெற்கு துணை கமிஷனர் சீனிவாசப்பெருமாள் மேற்பார்வையில், தெற்குவாசல் உதவி கமிஷனர் சண்முகம் ஆலோசனையின் பேரில், கீரைத்துறை இன்ஸ்பெக்டர் பெத்துராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் புகார் கொடுத்த 2 பெண்களிடமும் விசாரணை நடத்தினர்.

அப்போது ஜெர்மனி கூறுகையில், "எனக்கு சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவம் பார்ப்பதற்காக வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனியைச் சேர்ந்த சித்திரைஅழகு என்பவரிடம் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கினேன். இதற்கு அவர் அதிகப்படியாக வட்டி வசூலித்து வந்தார். நான் சித்திரை அழகுவிடம் வாங்கிய ரூ.50 ஆயிரம் கடனை அடைப்பதற்காக, காமராஜர்புரம் இந்திரா நகரைச் சேர்ந்த தங்கராஜ் மனைவி லட்சுமி (65) என்பவரிடம் ரூ. 50 ஆயிரம் கடன் வாங்கினேன். அதை சித்திரை அழகுவிடம் கொடுத்தேன். இருந்த போதிலும் அவர் "நீ கொடுத்த பணம், வட்டியில் மட்டுமே கழிந்து உள்ளது. நீ மேலும் ரூ.50 ஆயிரம் தரவேண்டும்" என்று மிரட்டினார். இதற்கிடையே லட்சுமியும் வில்லாபுரம் மயானக்கரை தெருவைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவருடன் சேர்ந்து என் வீட்டுக்கு வந்து, கந்து வட்டி கேட்டு தொல்லை கொடுத்து வருகிறார்.

சம்பவத்தன்று இரவு நான் வீட்டில் தனியாக இருந்தேன். அப்போது அங்கு வந்த சித்திரைஅழகு, லட்சுமி மற்றும் மோகன்ராஜ் ஆகியோர் "நீ வாங்கிய பணத்தை வட்டியும், அசலுமாக இப்போதே தரவேண்டும். இல்லையென்றால் உன்னை குடும்பத்தோடு கொன்று விடுவோம்" என்று மிரட்டி விட்டு சென்றனர்" என்றார்.

இதேபோல் புகார் செய்த காமராஜர்புரம், வடக்கு தெருவை சேர்ந்த ரவிச்சந்திரன் மனைவி கீதா என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவரிடமும் சித்திரை அழகு, லட்சுமி, மோகன்ராஜ் ஆகியோர் கந்து வட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் கந்து வட்டி கேட்டு மிரட்டிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News