உள்ளூர் செய்திகள்

வடபழனி நிதி நிறுவனத்தில் கொள்ளை- உறவினர் வீட்டில் பதுக்கிய ரூ.10 லட்சம் பறிமுதல்

Published On 2022-08-27 08:34 GMT   |   Update On 2022-08-27 08:34 GMT
  • பட்டதாரி வாலிபரான தமிழ்செல்வன் திருப்பத்தூரில் உள்ள தனது உறவினர் வீட்டில் ரூ.10லட்சம் ரொக்கத்தை பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது.
  • இதையடுத்து அங்கு சென்ற போலீசார் ரூ.10லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

போரூர்:

சென்னை வடபழனி மன்னார் முதலி தெருவில் சரவணன் என்பவர் நடத்தி வரும் நிதி நிறுவனத்தில் கடந்த 16-ந்தேதி புகுந்த 8பேர் கும்பல் அங்கிருந்த ஊழியர்களை கத்தியால் தாக்கிவிட்டு லாக்கரில் இருந்த ரூ.37லட்சம் பணத்தை கொள்ளையடித்து தப்பி சென்றனர்.

பட்டப்பகலில் சினிமா பட பாணியில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த வடபழனி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் கல்லூரி மாணவர் ரியாஸ் பாஷா, கிஷோர்கரன், தமிழ்செல்வன், ஜானி என்கிற சந்தோஷ், தினேஷ், மொட்டை கண்ணன், இஸ்மாயில், பரத்வாஜ் ஆகிய 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து சுமார் ரூ.17லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் இக்கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான தமிழ் செல்வன், கிஷோர் கரன், மொட்டை கண்ணன் உள்ளிட்ட 5 பேரை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்த வடபழனி போலீசார் மீதமுள்ள பணத்தை எங்கு பதுக்கி வைத்தனர் என்பது குறித்து 5பேரிடமும் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது பட்டதாரி வாலிபரான தமிழ்செல்வன் திருப்பத்தூரில் உள்ள தனது உறவினர் வீட்டில் ரூ.10லட்சம் ரொக்கத்தை பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அங்கு சென்ற போலீசார் ரூ.10லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். இதுவரை கொள்ளை கும்பலிடம் இருந்து ரூ.27லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News