உள்ளூர் செய்திகள்
திண்டுக்கல்லில் ஒட்டப்பட்டுள்ள பரபரப்பு போஸ்டர்.

சின்னம் வாங்கியது நாங்கதான்- திண்டுக்கல்லில் ஒட்டப்பட்ட பரபரப்பு போஸ்டர்

Published On 2022-06-25 04:51 GMT   |   Update On 2022-06-25 04:51 GMT
  • 1972ல் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை உருவாக்கியவுடன் முதன்முதலாக திண்டுக்கல்லில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் தனது கட்சி வேட்பாளராக மாயத்தேவர் என்பவரை நிறுத்தினார்.
  • அவர் இரட்டை இலை சின்னத்தில் நின்று அமோக வெற்றி பெற்றார். அப்போது முதல் இரட்டை இலை சின்னம் அ.தி.மு.க.வின் வெற்றி சின்னமாக பார்க்கப்படுகிறது.

திண்டுக்கல்:

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை குறித்த சர்ச்சை இன்னும் நீடித்து வரும் நிலையில் நிர்வாகிகள் தனித்தனியாக தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மேலும் இரு தரப்பைச் சேர்ந்த ஆதரவாளர்களும் பரபரப்பு போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல்லில் இன்று மாயத்தேவர் அ.தி.மு.க. என்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னம் வாங்கியது நாங்கதான் என்ற வாசகங்களுடன் இடம்பெற்றுள்ள போஸ்டர் குறித்து நிர்வாகிகள் தெரிவிக்கையில், 1972ல் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை உருவாக்கியவுடன் முதன்முதலாக திண்டுக்கல்லில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் தனது கட்சி வேட்பாளராக மாயத்தேவர் என்பவரை நிறுத்தினார். அவர் இரட்டை இலை சின்னத்தில் நின்று அமோக வெற்றி பெற்றார். அப்போது முதல் இரட்டை இலை சின்னம் அ.தி.மு.க.வின் வெற்றி சின்னமாக பார்க்கப்படுகிறது.

அதன் பிறகும் மாயத்தேவர் 3 முறை இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க.வில் பல முறை பிளவு ஏற்பட்ட போதிலும் இரட்டை இலை சின்னம் யார் பக்கம் உள்ளதோ அவர்களே உண்மையான அ.தி.மு.க. என்பது தொண்டர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

அதன்படி அ.தி.மு.க.வின் வெற்றி சின்னத்தை பெற்றுத் தந்த சின்னாளப்பட்டியைச் சேர்ந்த மாயத்தேவர் இன்னும் உயிரோடுதான் உள்ளார். எனவே இரட்டை இலை சின்னத்தை யாரும் கைப்பற்ற முடியாது என்று தெரிவித்தனர்.

இந்த போஸ்டரில் எடப்பாடி பழனிசாமியை தவிர்த்து அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், முத்துராமலிங்கத்தேவர் மற்றும் தேர்தலில் வெற்றி பெற்ற மாயத்தேவர் ஆகியோர் படங்களுடன் போஸ்டர் இடம்பெற்றுள்ளது.

இது அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்களாக உள்ள நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகிய 2 பேரும் தற்போது எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News