உள்ளூர் செய்திகள்

சென்னையில் 80 சதவீத மழைநீர் வடிகால் பணிகள் அடுத்த மாதம் முடிவடையும்- அமைச்சர் கே.என்.நேரு தகவல்

Published On 2022-08-22 08:26 GMT   |   Update On 2022-08-22 10:00 GMT
  • நகரில் மழைநீர் வடிகால் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
  • பல இடங்களில் கால்வாய் அமைக்கும் போதும் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் அதிகமாக இருப்பதால் அதை சரி செய்ய சற்று தாமதம் ஏற்படுகிறது.

சென்னை:

சென்னை தலைமை செயலகத்தில் சென்னை தினத்தை ஒட்டி சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் நடந்த கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி போன்றவற்றில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:-

சென்னையில் நேற்று ஒரு நாள் பெய்த மழைக்கு தண்ணீர் பல இடங்களில் தேங்கியது தெரிய வந்ததும் துரிதமாக வடிய வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நகரில் மழைநீர் வடிகால் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. பல இடங்களில் கால்வாய் அமைக்கும் போதும் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் அதிகமாக இருப்பதால் அதை சரி செய்ய சற்று தாமதம் ஏற்படுகிறது.

மேலும், சென்னை நகர் பகுதியில் ஒரு சில இடங்களில் 40 சதவீத பணிகளும், ஒரு சில இடங்களில் 50 சதவீத பணிகளும், ஒரு சில இடங்களில் 70 சதவீத பணிகளும் நடைபெற்று உள்ளது. ஒப்பந்ததாரரிடம் அதிகமான ஆட்கள் இல்லாத காரணத்தினால் தாமதமாக பணிகள் நடைபெற்று வருகிறது.

எனவே இதில் ஏற்படும் சிரமங்களை சிலகாலம் பொதுமக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் .

ஆற்றங்கரைப் பகுதியில் அடுத்த ஆண்டுதான் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடையும் .

ஆகவே இந்த பருவ மழைக்கு சென்னையில் சில பகுதிகளில் மழை நீர் தேங்கும். ஆனால் கடந்த காலங்கள் போல் அதிக அளவில் மழை பெய்தால் மழை நீர் தேங்குவதற்கான வாய்ப்பு இல்லை .

இவ்வாறு அவர் கூறினார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்த கேள்விக்கு, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி டேவிதார் முதல்-அமைச்சரிடம் அறிக்கை வழங்கி இருப்பதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கையை முதல்-அமைச்சர் மேற்கொள்வார் என்றும் அமைச்சர் கே.என் நேரு தெரிவித்தார்.

Tags:    

Similar News