உள்ளூர் செய்திகள்

அதானி, அம்பானியை வளர்த்து பா.ஜ.க. இமாலய ஊழல் செய்துள்ளது- கே.எஸ்.அழகிரி

Published On 2022-06-22 09:23 GMT   |   Update On 2022-06-22 09:23 GMT
  • கொரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு கோடிக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள்.
  • கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் குஜராத்தைச் சேர்ந்த அதானியும், அம்பானியும் தங்கள் சொத்து மதிப்பை பன்மடங்கு உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு தான் கவுதம் அதானியின் தொழில்கள் பெரிய அளவில் வளர்ச்சியடைந்தன. தொலைத்தொடர்பு, வணிக வளாகங்கள், பெட்ரோலியம் என வணிகம் சார்ந்த களத்தில் ரிலையன்ஸ் பயணித்து லாபம் ஈட்டுகிறது. துறைமுகம், ரெயில்வே துறை, விமான நிலையங்கள், எரிசக்தி என அடிப்படை சேவை சார்ந்த களத்தில் பயணித்து லாபம் ஈட்டுகிறது அதானி குழுமம்.

தொழிலதிபர்களை வைத்து பா.ஜ.க. ஆட்சியாளர்கள் நவீன விஞ்ஞானப்பூர்வமான ஊழலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தான் அதானியின் 8 ஆண்டுகால அசுர வளர்ச்சி காட்டுகிறது. அரசு இயந்திரங்கள் அனைத்தும் அதானியின் பின்னே நிற்கின்றன. அமலாக்கத்துறை அதானியை அரவணைக்கிறது. அரசின் மற்ற உயர் அரசு நிறுவனங்களுக்கும் அதானி செல்லப்பிள்ளையாக மாறியிருக்கிறார்.

அதானி போன்றோரை வளர்த்துவிட்டு, பின்னர் அவர்களிடமிருந்து தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி என்ற பெயரில் பெரும் தொகையை பெறுகின்றனர். அதாவது ஊழலை பா.ஜ.க. ஆட்சியாளர்கள் சட்டப்பூர்வமாக்கி விட்டதையே இது காட்டுகிறது. இந்தியாவில் மட்டுமின்றி இலங்கை, ஆஸ்திரேலியா என வெளிநாடுகளிலும் கவுதம் அதானி காலூன்ற உதவி செய்ததன் மூலம், ஊழலை கடல் கடந்தும் விரிவு படுத்தியிருக்கிறது மோடி அரசு.

கொரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு கோடிக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள். இந்தச் சூழலில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் குஜராத்தைச் சேர்ந்த அதானியும், அம்பானியும் தங்கள் சொத்து மதிப்பை பன்மடங்கு உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்காக பா.ஜ.க. தரப்பில் அடைந்த ஆதாயத்தை இமாலய ஊழல் என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News