உள்ளூர் செய்திகள்

ஆம்பூர் அருகே மஞ்சள் நீராட்டு விழா பந்தலில் மின்சாரம் பாய்ந்து மூதாட்டி பலி

Published On 2022-07-26 06:19 GMT   |   Update On 2022-07-26 06:19 GMT
  • மஞ்சள் நீராட்டு விழாவிற்கு அமைத்த பந்தலில் மின்சாரம் பாய்ந்து மூதாட்டி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
  • உமாராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆம்பூர்:

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள சின்ன பள்ளி குப்பம் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி ஜானகி (வயது 69). இதே பகுதியில் நேற்று இளம்பெண் ஒருவருக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. இதற்காக இரும்பு கம்பிகளை வைத்து பந்தல் அமைத்திருந்தனர். மேலும் மின்விளக்கு அலங்காரமும் செய்யப்பட்டுள்ளது.

விடிய விடிய மழை பெய்ததின் காரணமாக அலங்கார விளக்குகளுக்கு செல்லக்கூடிய ஒயரிலிருந்து மின் கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பந்தல் அமைக்கப்பட்டுள்ள கம்பி வலியாக மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. இதனை அறியாத ஜானகி இன்று காலை பந்தல் அருகே சென்று சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது இரும்பு கம்பியில் உரசினார். அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. அவர் அலறி துடித்தார்.

அங்கு வந்திருந்த கடலூர் குள்ளஞ்சாவடி இலங்கைத் தமிழர் முகாமை சேர்ந்த ஸ்ரீதர் (30) என்பவர் ஓடிச்சென்று காப்பாற்ற முயன்றார். அவரும் படுகாயம் அடைந்தார். அங்கிருந்த பொதுமக்கள் இருவரையும் மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் வழியிலேயே ஜானகி பரிதாபமாக இறந்தார். ஸ்ரீதருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து உமாராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மஞ்சள் நீராட்டு விழாவிற்கு அமைத்த பந்தலில் மின்சாரம் பாய்ந்து மூதாட்டி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News