உள்ளூர் செய்திகள்

சோனியாவிடம் விசாரணை நடத்தும் அமலாக்கத்துறையை கண்டித்து சென்னையில் காங்கிரசார் போராட்டம்

Published On 2022-07-26 10:01 GMT   |   Update On 2022-07-26 10:01 GMT
  • டெல்லியில் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் அலுவலகத்தில் இன்று காங்கிரஸ் எம்.பி.க்கள் ஒன்று கூடினார்கள்.
  • சோனியாவிடம் விசாரணை நடத்தும் அமலாக்கத்துறையை கண்டித்து டெல்லி அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர்.

சென்னை:

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு நேரில் இன்று ஆஜராக வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதையடுத்து சோனியா காந்தி இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.

இந்தநிலையில் சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறையை கண்டித்து நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது.

டெல்லியில் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் அலுவலகத்தில் இன்று காங்கிரஸ் எம்.பி.க்கள் ஒன்று கூடினார்கள். அவர்கள் சோனியாவிடம் விசாரணை நடத்தும் அமலாக்கத்துறையை கண்டித்து டெல்லி அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர்.

இதேபோல் பல்வேறு மாநிலங்களிலும் இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது.

தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னையில் இன்று பல இடங்களில் சத்தியாகிரக போராட்டம் நடந்தது. மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் சிவ.ராஜசேகரன் தலைமையில் சென்னை துறைமுகம் நாட்டு பிள்ளையார் கோவில் தெருவில் அமைந்துள்ள காந்தி சிலை அருகில் சத்தியாகிரக போராட்டம் நடந்தது.

அமைதியான வழியில் நடந்த இந்த போராட்டத்தில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, திருநாவுக்கரசர் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

இந்த போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. முருகானந்தம், பொன். கிருஷ்ணமூர்த்தி, டி.வி.துரைராஜ், பொதுக்குழு உறுப்பினர் கராத்தே ரவி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் எம்.எஸ். திரவியம் தலைமையில் வண்ணாரப்பேட்டை தபால் நிலையம் அருகில் சத்தியாகிரக போராட்டம் நடந்தது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. உ.பலராமன், கோபண்ணா, கவுன்சிலர் தீர்த்து மற்றும் நூற்றுக்கணக்கான காங்கிரசார் கலந்து கொண்டனர்.

தமிழக இளைஞர் காங்கிரஸ் சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் எம்.லெனின் பிரசாத் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் செந்தில் குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பல்லாவரம் நகர தலைவர் தீனதயாளன், தாம்பரம் நகர தலைவர் விஜய் ஆனந்த், மாநில சிறுபான்மை பிரிவு துணை தலைவர் பிரின்ஸ் தேவ சகாயம், அனகாபுத்தூர் நகர தலைவர் அப்துல் காதர், முன்னாள் மாவட்ட தலைவர் சிவராமன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்தும் அமலாக்கத்துறையை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

காட்டாங்கொளத்தூர் ஒன்றிய அலுவலகம் அருகில் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட செயலாளர் வக்கீல் சுந்தரமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் ஒன்றிய தலைவர் ஜானகிராமன், மறைமலை நகர் நகர தலைவர் தனசேகரன், கூடுவாஞ்சேரி நகர தலைவர் கிருஷ்ணன், செங்கல்பட்டு நகர தலைவர் பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News