உள்ளூர் செய்திகள்

தி.மு.க.வுக்கு சோதனை ஏற்பட்ட போது பக்கபலமாக இருந்தவர் வக்கீல் நடராஜன்- மு.க.ஸ்டாலின் புகழாரம்

Published On 2022-08-14 08:22 GMT   |   Update On 2022-08-14 08:22 GMT
  • இந்திய தண்டனைச் சட்டம், இந்திய அரசியல் சட்டம் உள்ளிட்ட அனைத்து சட்டங்களிலும் வல்லுநராக விளங்கிய நடராஜன்.
  • நம்முடைய கலைஞரின் வழக்கறிஞராக பல வழக்குகளில் வாதாடி வெற்றி கண்டவர் நடராஜன்.

சென்னை:

சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற மூத்த வழக்கறிஞர் என்.நடராஜனின் உருவப்படத்தைத் திறந்து வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

நம்முடைய நெஞ்சமெல்லாம் நிறைந்து வாழ்ந்து கொண்டிருக்கிற மரியாதைக்குரிய சட்ட அறிஞர், மூத்த வழக்கறிஞர் என். நடராஜனுடைய நினைவுகளைப் போற்றக்கூடிய நிகழ்ச்சியாக இந்த படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கடந்த ஆண்டு நடராஜன் மறைந்தபோது, நம்முடைய சண்முகசுந்தரம் குறிப்பிட்டதைப் போல உடனடியாக அவருடைய இல்லத்திற்குச் சென்று அவருடைய உடலுக்கு மரியாதை செய்து, நான் அஞ்சலி செலுத்தி இருக்கிறேன்.

இந்திய தண்டனைச் சட்டம், இந்திய அரசியல் சட்டம் உள்ளிட்ட அனைத்து சட்டங்களிலும் வல்லுநராக விளங்கிய நடராஜன். நம்முடைய கலைஞரின் வழக்கறிஞராக பல வழக்குகளில் வாதாடி வெற்றி கண்டவர் அவர்.

அவருடைய இழப்பு என்பது வழக்கறிஞர்களுக்கு நீதித்துறைக்கு மட்டும் ஏற்பட்ட இழப்பு அல்ல. எங்களைப் போன்றவர்களுக்கும் ஏற்பட்ட இழப்புதான் என்பதை நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

தி.மு.க.வுக்கு குறிப்பாக தலைவர் கலைஞருக்கு மிகப்பெரிய சோதனை ஏற்பட்டது எல்லோருக்கும் தெரியும். ஜெயின் கமிஷன் மூலமாக அந்த சோதனை வந்த நேரத்தில், தன்னுடைய வாதங்களின் மூலமாக காத்தவர் நம்முடைய நடராஜன் என்பதை யாரும் மறந்திடமுடியாது. நாங்கள் நிச்சயமாக எங்களுடைய வாழ்நாள் முழுவதும் அதை மறக்க முடியாது.

அதைப்போல, 1996-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, அதற்கு முன்பிருந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்து ஊழல்கள் தொடர்பாக, தனி நீதிமன்றங்கள் அமைக்கப்பட்ட வேண்டும் என்று முடிவெடுத்தபோது, சீரிய ஆலோசனைகளைச் சொன்னவரும் நடராஜன் தான்.

தனது அறிவுக்கூர்மையாலும், வாதத்திறமையாலும் நீதிமன்றங்களின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்த நடராஜனின் புகழ் என்றும் நிலைத்து நீடிக்கும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Tags:    

Similar News