உள்ளூர் செய்திகள்
திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளி முன்பு வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பலகை.

மாணவர்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டினால் பெற்றோருக்கு 3 ஆண்டு சிறை- ரூ.25ஆயிரம் அபராதம்

Published On 2022-07-26 04:41 GMT   |   Update On 2022-07-26 05:41 GMT
  • போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன.
  • பள்ளி பருவத்திலேயே பலர் வாகன விபத்துகளில் பலியாகும் சம்பவங்களும் நடக்கிறது.

திருப்பூர்:

போக்குவரத்து சட்டத்தில், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே வாகனங்கள் ஓட்ட வேண்டும். முறையாக பயிற்சி பெற்று ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் விண்ணப்பித்து, டிரைவிங் லைசென்ஸ் பெற வேண்டும்.

போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன.ஆனால் திருப்பூரில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளில் சிலர் மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

விதிமுறைகளை மீறி மாணவர்கள் மோட்டார் சைக்கிள்களை ஓட்டி வருவதால், விபத்துகள் அதிகரித்து வருகின்றன. பள்ளி பருவத்திலேயே பலர் வாகன விபத்துகளில் பலியாகும் சம்பவங்களும் நடக்கிறது. போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து விதிகளை மீறி மோட்டார் சைக்கிள்களை ஓட்டுகின்றனர்.

அதனை தடுக்கும் வகையில் திருப்பூர் போக்குவரத்துத்துறை அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி மோட்டார் சைக்கிள் ஓட்டும் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு ரூ.25ஆயிரம் அபராதம் , 3 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திருப்பூரில் உள்ள பள்ளிகள் முன்பு திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்துத்துறை சார்பில் அறிவிப்பு பலகையும் வைக்க ப்பட்டுள்ளது.

அதில்,திருத்தப்பட்ட மோட்டார் வாகனச்சட்டம் 2019 சட்டப்பிரிவு '199 ஏ'ன் படி உரிய ஓட்டுநர், பழகுநர் உரிமம் பெறாமல் மோட்டார் வாகனங்களை ஓட்டினால் சிறார்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இத்துடன் 3 ஆண்டு சிறை தண்டனை நிச்சயம்.

அதேபோல் வாகனம் 12 மாதங்களுக்கு சாலையில் ஓடுவது ரத்து செய்யப்படும். வாகனத்தை ஓட்டிய சிறுவர்கள் தங்களின் 25 வயது வரை எந்தவித ஓட்டுநர் உரிமமும் பெற இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News