உள்ளூர் செய்திகள்

அனகாபுத்தூரில் 200 ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க முயன்ற அதிகாரிகள்- பெண்கள் போராட்டம்

Published On 2023-07-08 06:51 GMT   |   Update On 2023-07-08 07:23 GMT
  • நாங்கள் 50 வருடங்களுக்கு மேலாக 3 தலைமுறையாக வாழ்ந்து வருகிறோம்.
  • பெண்கள் மற்றும் வயதானவர்கள் ஒப்பாரி வைத்து நூதன முறையில் போராட்டம் செய்தனர்.

சென்னை:

சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றங்கரை பகுதியை ஆக்கிரமித்து 200 வீடுகள் கட்டப்பட்டிருந்தன. இந்த 200 வீடுகளுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறையாக நோட்டீஸ் வழங்கி ஆக்கிரமிப்புகளை அகற்ற போவதாக அறிவித்தனர்.

இந்நிலையில் நேற்று காயிதே மில்லத் நகர், டோபி கானா நகர், தாய் மூகாம்பிகை நகர் மற்றும் சாந்தி நகரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற போவதாக கூறி வருவாய் துறையினர் நோட்டீஸ் அளித்தனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் இந்த பகுதியில் நாங்கள் 50 வருடங்களுக்கு மேலாக 3 தலைமுறையாக வாழ்ந்து வருகிறோம்.

எங்களுக்கு எந்த ஒரு அறிவிப்பும் அளிக்காமல் இப்பொழுது நாங்கள் வாழ்ந்து வரும் இந்த பகுதியை காலி செய்து கொண்டு போகச் சொன்னால் நாங்கள் எங்கே போவோம் என்று கூறி புலம்பியபடி பெண்கள் மற்றும் வயதானவர்கள் ஒப்பாரி வைத்து நூதன முறையில் போராட்டம் செய்தனர்.

இதனையடுத்து தங்களை காலி செய்ய சொல்வதற்கு பதிலாக ஆற்றின் கரைகளை வலுப்படுத்தி சுவர் எழுப்பி தங்களை தாங்கள் வாழ்ந்த இந்தப் பகுதியிலேயே வாழ விட வேண்டும் என்று முதலமைச்சருக்கு கோரிக்கையும் வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்பு பொதுப்பணித்துறை அதிகாரிகள் காவல்துறையின் உதவியோடு 10 வீடுகளை இடித்தனர். மீதமுள்ள 190 வீடுகள் வருகிற திங்கள் கிழமைக்கு மேல் அகற்றப்படும் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News