உள்ளூர் செய்திகள்

கோர்ட்டில் ஆஜரான சபாரத்தினம்.


கொலை வழக்கில் தேடப்பட்டவர் திண்டுக்கல் கோர்ட்டில் சரண்

Published On 2022-06-21 08:39 GMT   |   Update On 2022-06-21 08:39 GMT
  • பரமக்குடி மற்றும் மதுரையில் நடந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசாரால் தேடப்பட்டவர் திண்டுக்கல் கோர்ட்டில் சரணடைந்தார்
  • கொலை வழக்கில் தேடப்பட்டவர் சரண்

திண்டுக்கல்:

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகில் உள்ள அரியமங்கலம் கிராமத்தில் கடந்த 2019-ம் ஆண்டு மணிகண்டன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மதுரை மாவட்டம் மேலஅனுப்பானடி பகுதியை சேர்ந்த பழனிக்குமார், வழிவிட்டான், அழகுமுருகன், முத்துமுருகன் ஆகிய 4 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் 4 பேரும் ராமநாதபுரம் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் நேரில் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தனர். அதன்படி கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10-ந்தேதி ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு அரசு பஸ்சில் சென்றனர்.

அப்போது பரமக்குடியை அடுத்து கமுதக்குடி என்ற இடத்தில் சென்றபோது பஸ்சை வழிமறித்து 10-க்கும் மேற்பட்டோர் அரிவாள் மற்றும் பயங்கர ஆயுதங்களை கொண்டு அவர்கள் 4 பேரையும் தாக்கினர். இந்த வழக்கில் மதுரை மாவட்டம் சின்னஅனுப்பானடியை சேர்ந்த சபா என்ற சபா ரத்தினம்(34) என்பவரை தேடி வந்தனர்.

இவர் மீது மதுரை மற்றும் பரமக்குடி போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளதால் போலீசார் தன்னை என்கவுண்டரில் சுட்டுத்தள்ள முயற்சிப்பதாகவும், தன்னை காப்பாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் உள்ளது. போலீசார் எந்தவித காரணமும் இல்லாமல் தன்னை தேடி வருவதால் தான் இன்று திண்டுக்கல் கோர்ட்டில் சரணடைவதாக தெரிவித்தார்.

இதனையடுத்து அவரை வருகிற 27-ந்தேதி வரை சிறையில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். சபாரத்தினம் கடந்த 2013-ம் ஆண்டு மதுரையில் தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினராக சுரேஷ் என்ற பொட்டு சுரேஷ் என்பவரை படுகொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.


Tags:    

Similar News