தமிழ்நாடு

சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் செம்மொழி மாநாடு

Published On 2024-05-25 09:32 GMT   |   Update On 2024-05-25 09:32 GMT
  • பெரியாரின் சிந்தனைகளை 21 இந்திய மற்றும் உலக மொழிகளில் அச்சு மற்றும் மின்னூல் பதிப்புகளாகத் தயாரித்திட தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்திற்கு 5 கோடி ரூபாய் வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளது.
  • 100 கல்லூரிகளுக்கு ஒவ்வொரு கல்லூரிக்கும் வைப்புத் தொகையாக ரூ. 5 லட்சம் என மொத்தம் ரூபாய் 5 கோடி ரூபாயும் முதலாண்டில் போட்டிகள் நடத்திட கூடுதலாக ரூபாய் 36 லட்சமும் வழங்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் ஆணையிடப்பட்டுள்ளது.

சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும்; தமிழை ஆட்சி மொழியாக்கிட அரும்பாடுபட்டு வருவதோடு, தமிழ் வளர்ச்சித்துறையின் வாயிலாக உலகத்தின் முதுமொழியாம் அமுதமெனும் தமிழ்மொழியை உயர்த்துதல், தமிழறிஞர்களுக்கு விருது வழங்குதல், அரிய தமிழ் நூல்களை நாட்டுடைமையாக்குதல் உள்ளிட்ட எண்ணற்ற நன்மை பயக்கும் திட்டங்களைத் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகின்றன.


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17.12.2021 அன்று தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மாநிலப் பாடலாக அறிவித்து, இப்பாடல் பாடப்படும்போது அனைவரும் தவறாமல் எழுந்து நின்று மரியாதை செலுத்திட வேண்டுமென்று ஆணையிட்டுத் தமிழ்மொழிக்கு பெருமை சேர்க்கப்பட்டு உள்ளது.

தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் தமிழறிஞர்களை அடையாளம் கண்டு அவர்களைப் பெருமைப்படுத்திடும் வகையில், 35 இனங்களில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி சிறப்புச் செய்யப்பட்டு வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுத் தொகையை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தியதோடு, புதியதாக இலக்கிய மாமணி விருது தோற்றுவிக்கப்பட்டு ஆண்டுதோறும் மூன்று அறிஞர்களுக்கு தலா விருது தொகை ரூ.5 லட்சம் வழங்கிட ஆணையிட்டுள்ளார்.

மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் புதியதாக உருவாக்கப்பட்டு பொதுத்துறையால் இரண்டு ஆண்டுகள் வழங்கப்பட்ட தகைசால் தமிழர் விருதும் இவ்வாண்டு முதல் தமிழ் வளர்ச்சித்துறையின் வாயிலாக வழங்கப்படவுள்ளது.

தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கடந்த 3 ஆண்டுகளில் 22 தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கி, அவர்களின் மரபுரிமையர்க்கு 2 கோடியே 85 லட்சம் ரூபாய் நூலுரிமைத்தொகையும் வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழறிஞர்களுக்கு தமிழ்நாட்டிற்குள் வீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, முதற்கட்டமாக 6 அறிஞர்கட்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் உயர் வருவாய்ப் பிரிவு வீடுகளை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கியுள்ளார்.

ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வரும் "குறள் முற்றோதல்" திட்டத்தின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் 1,330 குறட்பாக்களையும் முற்றோதல் செய்த 451 மாணவர்களுக்கு தலா ரூ.15,000 வீதம் மொத்தம் 63 லட்சத்து 46 ஆயிரத்து 500 ரூபாய் குறள் பரிசுத் தொகை வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளனர்

"தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்களிடையே தமிழ் ஆர்வத்தினை அதிகரிக்க, 100 கல்லூரிகளுக்கு ஒவ்வொரு கல்லூரிக்கும் வைப்புத் தொகையாக ரூ. 5 லட்சம் என மொத்தம் ரூபாய் 5 கோடி ரூபாயும் முதலாண்டில் போட்டிகள் நடத்திட கூடுதலாக ரூபாய் 36 லட்சமும் வழங்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் ஆணையிடப்பட்டுள்ளது.

'தீராக் காதல் திருக்குறள்' என்ற பெயரில் தமிழ் இணையக் கல்விக் கழகம் வாயிலாக தீந்தமிழ் நிகழ்ச்சிகளை நடத்திட 25 லட்சம் ரூபாய் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ள நிதியுதவியில் குறளோவியம் எனும் தலைப்பில் ஓவியப் போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

தமிழக வரலாற்றில் முதன்முறையாக தந்தை பெரியாரின் சிந்தனைகளை 21 இந்திய மற்றும் உலக மொழிகளில் அச்சு மற்றும் மின்னூல் பதிப்புகளாகத் தயாரித்திட தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்திற்கு 5 கோடி ரூபாய் வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சீரிய முயற்சியினால் தமிழ் மொழி வளர்ச்சிக்காக எண்ணற்ற திட்டங்களைக் கடந்த மூன்றாண்டுகளாக நிறைவேற்றி வருவதுடன், பண்டையத் தமிழர் பண்பாட்டையும், பழங்காலத் தமிழர்களின் எழுத்தறிவு, நாகரிக வாழ்வு முறைமைகளையும் நுண்மையோடு பறை சாற்றும் வகையில், கீழடியில் அருங்காட்சியகம் அமைத்துச் சிறப்பித்ததோடு, அதன் தொடர்ச்சியாகப் பொருநையிலும் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழர்களை ஒருங்கிணைக்கும் விதமாகவும், அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாகவும் ஜனவரி மாதம் 12-ம் நாளினை அயலகத் தமிழர் தினமாக அறிவிக்கப்பட்டு, தமிழ் வெல்லும் என்னும் கருப்பொருளை மையமாகக் கொண்டு, நடப்பாண்டில் அயலகத் தமிழர் மாநாடும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் மகிபாலன் பட்டியில் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" எனும் செம்மொழித் தொடர் தந்த கணியன் பூங்குன்றனார் நினைவுத் தூணைக் காணொலிக் காட்சி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்குத் திட்டத்தின் கீழ் பிறநாட்டு இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்த்து அச்சிட்டு வெளியிடும் பணியில் புகழ்வாய்ந்த கிரேக்கக் காப்பியங்களான ஓமரின் 'இலியட்', 'ஒடிசி' ஆகிய இருபெருநூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.

இன்பத் தமிழுக்கு மேலும் சிறப்புகள் சேர்க்கும் வகையில் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, சென்னையில் வரும் 2025-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஐந்து நாட்கள் சீரோடும் சிறப்போடும் சிந்தனைச் செயல்திறத்தோடும் மாபெரும் அளவில் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News