உள்ளூர் செய்திகள்

நட்சத்திர ஏரியில் ஆனந்தமாக படகுசவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்.

தொடர் மழையிலும் கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Published On 2022-07-10 04:40 GMT   |   Update On 2022-07-10 04:40 GMT
  • கொடைக்கானலில் சீசன் முடிந்த நிலையிலும் வார விடுமுறையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாகவே உள்ளது.
  • கொடைக்கானல்-வத்தலக்குண்டு பிரதான சாலையில் லாஸ்கட் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கொடைக்கானல்:

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கொரோனா ஊரடங்கு காரணமாக 2 ஆண்டுகளாக சுற்றுலா பயணிகள் வருகை இல்லை. இதனால் சிறுகுறு வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் உள்பட சுற்றுலா தொழிலை நம்பியுள்ளவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டு கோடை சீசனின்போது 10 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர். தற்போது சீசன் முடிந்த நிலையிலும் வார விடுமுறையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாகவே உள்ளது.

கடந்த 3 நாட்களாக கொடைக்கானலில் சாரல் மழையும், பலத்த காற்றும் வீசி வருகிறது. இருந்தபோதம் முக்கிய சுற்றுலா இடங்களில் கூட்டம் அலைமோதியது. பிரையண்ட் பூங்கா, நட்சத்திர ஏரி பகுதியில் ஏராளமான சுற்றுலா வாகனங்கள் வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நட்சத்திர ஏரியில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக படகுசவாரி செய்து வந்தனர்.

மேலும் சைக்கிள், குதிரை சவாரியில் உற்சாகமாக சென்றனர். நேற்று இரவு கொடைக்கானல்-வத்தலக்குண்டு பிரதான சாலையில் லாஸ்கட் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் நீண்டதூரம் அணிவகுத்து நின்றது.

பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள். அதன்பின்னர் போக்குவரத்து சீரானது.

Tags:    

Similar News