உள்ளூர் செய்திகள்

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் கவர்னர் என்.ஆர். ரவி, அவரது மனைவி லட்சுமி ஆகியோர் சாமி தரிசனம் செய்ய வந்தபோது எடுத்த படம்.


ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் கவர்னர் என்.ஆர்.ரவி குடும்பத்துடன் சாமி தரிசனம்

Published On 2022-06-25 04:21 GMT   |   Update On 2022-06-25 05:26 GMT
  • ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் உள்ளிட்ட சாமி சன்னதிகளுக்கு சென்று கவர்னர் என்.ஆர்.ரவி தரிசனம் செய்தார்.
  • மேலும் கோவிலில் ஸ்படிக லிங்கத்துக்கு நடைபெற்ற பூஜையிலும் கலந்து கொண்டார்.

ராமேசுவரம்:

தமிழக கவர்னர் என்.ஆர்.ரவி குடும்பத்துடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் ஆகியவற்றில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று விமானம் மூலம் மதுரை வந்தார். பின்னர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

அவரை கோவில் துணை ஆணையர் அருணாசலம் வரவேற்றார். பின்னர் கவர்னர் என்.ஆர்.ரவி ராமேசுவரம் சென்றார். அங்குள்ள விருந்தினர் மாளிகையில் கலெக்டர் ஜானிடாம் வர்க்கீஸ், போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதைத்தொடர்ந்து பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு விடுதியில் கவர்னர் என்.ஆர்.ரவி குடும்பத்துடன் தங்கினார்.

இன்று அதிகாலை விடுதியில் இருந்து புறப்பட்ட கவர்னர் என்.ஆர்.ரவி, அவரது மனைவி லட்சுமி ஆகியோர் ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீர் எடுத்து தெளித்துக் கொண்டு ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்றார். அங்கு கோவில் குருக்கள் மற்றும் கோவில் அலுவலர்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர்.

இதைத்தொடர்ந்து அவர் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் உள்ளிட்ட சாமி சன்னதிகளுக்கு சென்று தரிசனம் செய்தார். மேலும் கோவிலில் ஸ்படிக லிங்கத்துக்கு நடைபெற்ற பூஜையிலும் கலந்து கொண்டார். அவர் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் சாமி தரிசனம் செய்தார். அங்கு தரிசனம் முடித்து விட்டு காரில் தனுஷ்கோடிக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு அரிச்சல்முனை கடற்கரை பகுதிக்கு சென்று பார்வையிட்டார்.

இன்று மாலை 2 மணிக்கு கவர்னர் என்.ஆர்.ரவி மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

Tags:    

Similar News