உள்ளூர் செய்திகள்
ராமதாஸ்

வடதமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தனிவாரியம் அமைக்க வேண்டும்- ராமதாஸ் கோரிக்கை

Update: 2022-05-17 10:57 GMT
வட மாவட்டங்களை புறக்கணித்து விட்டு தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வது சாத்தியமில்லை. இதை தமிழக அரசு உணர வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கல்வியில் வட தமிழ்நாடு மிகவும் பின்தங்கியிருப்பதை அரசு நடத்திய ஆய்வு உறுதி செய்திருக்கிறது. வட தமிழ்நாடு கல்வியில் பின்தங்கியிருப்பதை முதன்முறையாக ஒப்புக்கொண்டு, அப்பகுதியில் கல்வி வளர்ச்சிக்காக சிறப்புத் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு முன்வந்திருப்பது பாராட்டத்தக்கது. ஆனால், இது கடலில் தெரியும் பனிப்பாறையின் மேல் முனையளவு தான் என்பதை அரசு உணர வேண்டும்.

தமிழக அரசின் கல்வித்துறை இப்போது கண்டுபிடித்திருக்கும் இந்த விவரங்களை 30 ஆண்டுகளாகவே பா.ம.க. வலியுறுத்தி வருகிறது. கல்வியில் பின்தங்கிய 44 வட்டாரங்களை மட்டுமே அரசு இப்போது அடையாளம் கண்டிருக்கிறது. 200 வட்டாரங்களை அடையாளம் கண்டாலும் கூட, அவற்றில் 90 சதவீதத்துக்கும் கூடுதலானவை வடமாவட்டங்களில் தான் இருக்கும். இது கல்வியாளர்கள் அனைவருக்கும் தெரிந்த உண்மை.

அதனால் தான் வடதமிழகத்தில் கல்வியை மேம்படுத்துவதற்காக சிறப்புத் திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

சென்னை, கோவை, பெங்களூர் போன்ற நகர்ப்புறங்களை நோக்கிய கிராமப்புற மக்களின் இடப்பெயர்வுக்கு வட மாவட்டங்கள் வளர்ச்சி அடையாதது தான் காரணம் ஆகும். வட மாவட்டங்களை புறக்கணித்து விட்டு தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வது சாத்தியமில்லை. இதை தமிழக அரசு உணர வேண்டும்.

மகாராஷ்டிரா, குஜராத், நாகலாந்து, அஸ்ஸாம், மணிப்பூர், ஆந்திரம், சிக்கிம், மிசோரம், அருணாச்சலப்பிரதேசம், கோவா, ஐதராபாத், கர்நாடக மண்டலம் ஆகியவற்றில் சிறப்புத்திட்டங்களை செயல்படுத்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 371 முதல் 371 (ஜே) 11 பிரிவுகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

அதேபோல், தமிழ்நாட்டிலும் பின்தங்கிய பகுதிகளின் முன்னேற்றத்திற்காக அரசியலமைப்புச் சட்டத்தில் 371(கே) என்ற பிரிவை சேர்த்து அதன்படி தனி வளர்ச்சி வாரியத்தை உருவாக்கி, அதன்மூலம் வட மாவட்டங்களில் சிறப்புத் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News