உள்ளூர் செய்திகள்
குகை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பதிவு எண் ஒட்டும் பணியில் ஈடுபட்ட ஆசிரியைகள்.

பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது

Published On 2022-05-04 09:59 GMT   |   Update On 2022-05-04 09:59 GMT
பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது சேலத்தில் பள்ளி வகுப்பறைகளில் பதிவு எண் எழுதும் பணிகள் தீவிரம்.
சேலம்:

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்கி வருகிற 28-ந் தேதி வரை நடைபெறுகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பிளஸ்-2 பொதுத்தேர்வு நடைபெறவில்லை.

இந்தாண்டு பிளஸ்-2 தேர்வுகள் திட்டமிட்டப்பட்டி நேரடியாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதால் அதற்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

அதன்படி நாளை தொடங்கும் பிளஸ்-2 பொதுத்தேர்வை சேலம் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 18 ஆயிரத்து 394 மாணவர்கள், 20 ஆயிரத்து 861 மாணவிகள் என மொத்தம் 39 ஆயிரத்து 255 பேர் எழுதுகின்றனர். மாவட்டம் முழுவதும் 154 மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது.

பிளஸ்-2 தேர்வையொட்டி 154 தேர்வு மைய கண்காணிப்பாளர்களும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறை கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தேர்வில் முறைகேடுகளை தடுக்க 200-க்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர தனித்தேர்வர்களுக்காக 5 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

பிளஸ்-2 பொதுத்தேர்வு நடைபெறுவதையொட்டி வகுப்பறைகளில் மேஜை, நாற்காலிகள் ஆகியவற்றை இன்று ஆசிரியர்கள், ஆசிரியைகள் ஆய்வு செய்தனர். மேலும் மின் விளக்கு, குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகளை செய்து வருகிறார்கள்.

வகுப்பறையில் தேர்வு எழுதும்  மாணவ- மாணவிகளின் பதிவு எண், வரிசை எண் ஆகியவற்றை  மேஜையில் ஆசிரியர்கள் எழுதி வருகிறார்கள். மாணவ, மாணவிகள் தேர்வு எழுதும் முன் அவர்கள் தங்களுடைய தேர்வு எழுதும் வகுப்பறையை எளிதாக கண்டுபிடிக்கும் வகையில் கரும்பலகையில் நோட்டீசு ஒட்டப்பட்டுள்ளது. 

மேலும் மன அழுத்தம் ஏற்படாமல் இருக்கும் வகையில் மாணவ- மாணவிகளுக்கு தேர்வு தொடங்கும் முன் அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்க உள்ளனர்.
Tags:    

Similar News