உள்ளூர் செய்திகள்
அமைச்சர் கேஎன் நேரு

மத்திய அரசின் பரிந்துரையால் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது- அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்

Published On 2022-04-05 09:32 GMT   |   Update On 2022-04-05 09:32 GMT
மத்திய அரசின் வழிகாட்டுதல்படி சொத்து வரி சீராய்வு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
சென்னை:

சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் சொத்து வரி விகிதங்களை மாநில உள்நாட்டு வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆண்டுதோறும் உயர்த்திட வேண்டும் என்று மத்திய அரசு நிபந்தனை விதித்துள்ளது.

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம், அம்ரூத் 2.0 ஆகிய திட்டங்களின் கீழ் நிதி பெறுவதற்கு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சொத்துவரி குறித்த அறிக்கையை வெளியிடுவது கட்டாயம் என்று திட்ட வழிகாட்டுதலை மத்திய அரசால் வகுத்துரைக்கப்பட்டுள்ளது.

நமது முதல்-அமைச்சர் ரொம்ப கவனத்தோடு சொத்து வரியை உயர்த்தி உள்ளார். 2018-ம் ஆண்டு ஏற்கனவே இருந்த முந்தைய அ.தி.மு.க. அரசு 50 சதவீதம், 100 சதவீதம் என்று ஒரேயடியாக வரியை உயர்த்தினார்கள்.

2018-ம் ஆண்டு வரி சீராய்வு செய்யப்பட்டபோது குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதம் குடியிருப்பு அல்லாத இதர கட்டிடங்களுக்கு 100 சதவீதம் என்று அ.தி.மு.க. ஆட்சியில் வரியை உயர்த்தினார்கள். தேர்தல் வந்த காரணத்தால் அதை நிறுத்தி வைத்தார்கள்.

இப்போது நாம் அதை சீராய்வு செய்து நம்முடைய முதல்-அமைச்சர் ஏழைகள் அதிகமாக பாதிக்கப்படக் கூடாது என்ற காரணத்தால் தமிழகத்தில் உள்ள 83 சதவீத வீடுகளுக்கு 25 சதவீதம் முதல் 50 சதவீத வரி உயர்வு செய்யப்பட்டுள்ளது.

எனவே 25 முதல் 50 சதவீதம் வரை உயர்த்தப்பட்ட சொத்துவரி உயர்வு தமிழகத்தில் 83 சதவீதம் வீடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். 77 லட்சத்து 87 ஆயிரம் வீடுகள் வெறும் 25 சதவீதம் உயர்வு மட்டும் இருக்கிறது. சுமார் 45.54 லட்சம் வீடுகளுக்கு 50 சதவீதம் தான் வரி உயர்வு இருக்கிறது. மீதம் உள்ள 19.23 லட்சம் வீடுகளுக்கு தான் 100 சதவீதம் உயர்வு வருகிறது.

100-ல் இருந்து 150 சதவீதம் உயர்வு என்பது வெறும் 7 சதவீதத்தினருக்கு மட்டும் தான். டவுன் பஞ்சாயத்து மற்றும் நகராட்சிகளுக்கு சொத்துவரி உயர்வு குறித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 21 மாநகராட்சிகளுக்கு உள்ளாட்சி துறைக்கு வரி உயர்வு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி ஆட்சி மன்றம் வரி உயர்வுக்கான தீர்மானம் இயற்றும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுதான் இன்றைக்கு இருக்கிறது. அ.தி.மு.க. அரசில் 2018-ம் ஆண்டில் அனைவருக்கும் சேர்த்து 100 சதவீதம் என்று இருந்தது.

நாம் 25 முதல் 50 சதவீதம் வரை ஒரு தொகையும் 59 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை ஒரு தொகையும் என பிரித்து தமிழ்நாட்டில் இருக்கிற 77 லட்சம் வீடுகளுக்கு அதில் கிட்டத்தட்ட 83 சதவீதம் வீடுகளுக்கு வெறும் 25 முதல் 50 சதவீதம் உயர்வுதான் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அ.தி.மு.க.வினர் இன்று வரி உயர்வுக்காக ஆர்ப்பாட்டம் நடத்தி கொண்டிருக்கிறார்கள்.

எனவே இப்போது மத்திய அரசின் வழிகாட்டுதல்படி சொத்து வரி சீராய்வு செய்யப்பட்டுள்ளது.


Tags:    

Similar News