உள்ளூர் செய்திகள்
ஆனாங்கூர் பெருமாள் கோவிலில் வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் ரமேஷ், வரலாற்று மாணவர்கள் களஆய்வு மேற்கொண்டனர்

ஆனாங்கூர் பெருமாள் கோவிலில் சோழர் கால கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

Published On 2022-01-25 11:15 GMT   |   Update On 2022-01-25 11:15 GMT
ஆனாங்கூர் பெருமாள் கோவிலில் சோழர்கால கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.
விழுப்புரம்:

விழுப்புரம் அருகே உள்ள ஆனாங்கூர் பெருமாள் கோவிலில் சோழர்கால கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதனை விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் த.ரமேஷ் மற்றும் முதல்நிலை வரலாற்று மாணவர்கள் நிவன், உக்கிரமூர்த்தி, கலைமணி ஆகியோர் கண்டறிந்துள்ளனர். இதுபற்றி வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் ரமேஷ் கூறியதாவது:-

முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி.1070-1120), விக்கிரமச்சோழன் (1118-1135), இரண்டாம் குலோத்துங்க சோழன் (1133-1150) ஆகிய சோழ மன்னர்கள் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவையாவும் சுண்ணாம்பு பூசப்பட்டிருந்ததால் மறைந்து இருந்தது. தற்போது வண்ணத்தை நீக்கி கல்வெட்டை கண்டறிந்துள்ளோம். இக்கல்வெட்டுகள் முழுமைபெறவில்லை, எனினும் கங்கைகொண்ட சோழ வளநாட்டு பனையூர் நாட்டுஆனாங்கூர் என்று இவ்வூர் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 8 அடி நீளம் கொண்ட அளவுகோல் ஒன்று போடப்பட்டு அது குழிகோல் என்று குறிக்கப்படுகிறது. இது சோழர் காலத்தில் நிலத்தை அளப்பதற்கு பயன்பட்ட அளவுகோலாகும். கருவறையின் குமுதபட்டியில் ஆனாங்கூரை சேர்ந்த பொற்கொல்லரான சிற்றம்பலவன் படலன் என்பவன் தளிகை ஒன்றும் மணி ஒன்றும் வழங்கி உள்ளதை 14-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு தெரிவிக்கிறது.

இக்கோவிலில் பல்லவர்கால விஷ்ணு சிற்பம் ஒன்றும், கருடாழ்வார் சிற்பம் ஒன்றும், சோழர்கால விஷ்ணு சிற்பமும் உள்ளன. தற்போது கோவில் கருவறையின் உள்ளே 14-ம் நூற்றாண்டை சேர்ந்த மூலவர் சிற்பம் இடம்பெற்றுள்ளது. இக்கோவிலின் வடக்குபுற சுவரில் 38 அடி நீளம் கொண்ட பெரிய அளவுகோல் செதுக்கப்பட்டுள்ளது. இந்த அளவுகோல் கரத்து அளவுகோல் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இது 16-ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம். இவ்வூரில் பல்லவர்கால சிவன் கோவில் இருந்ததை மூன்றாம் நந்திவர்மனுடைய கல்வெட்டு தெரிவிக்கிறது. மேலும் பல்லவர்கால அரிய முருகன் சிற்பம் ஒன்றும் இவ்வூரில் உள்ளது. ஆனாங்கூர் பல்லவர் காலம் முதல் சோழர் காலம்வரை வரலாற்று சிறப்புமிக்க ஊராக திகழ்ந்திருக்கிறது தற்போது தெரியவருகிறது. இக்கோவில் சிதிலமடைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த களஆய்வின்போது ஆனாங்கூர் கிராம நிர்வாக அலுவலர் புஷ்பகாந்தன், ஊராட்சி மன்ற தலைவர் கனிமொழி வெங்கடேசன் உள்பட பலர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News