உள்ளூர் செய்திகள்
அண்ணா பஸ் நிலையத்தில் திறந்தவெளியில் மது குடிக்கும் மது பிரியர்கள்.

பஸ் நிலையத்திற்குள் செல்ல பயணிகள் அச்சம்

Published On 2022-01-22 11:00 GMT   |   Update On 2022-01-22 11:00 GMT
மதுரை அண்ணா பஸ் நிலையத்திற்குள் செல்ல பயணிகள் அச்சமடையும் சூழல் நிலவி வருகிறது.
மதுரை

மதுரையில் மாட்டுத்தாவணி பஸ் நிலையம் திறக்கப்படுவதற்கு முன்பு ராமேசுவரம், ராமநாதபுரம், சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட  ஊர்களுக்கு பஸ்கள் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்துதான் புறப்பட்டு செல்லும். எனவே அண்ணா பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். 

மாட்டுத்தாவணி பஸ் நிலையம் திறக்கப்பட்டவுடன் வெளியூர் பஸ்கள் புறப்படும் இடம் மாற்றப்பட்டதாலும், அரசு தலைமை மருத்துவமனை விரிவாக்கத்தாலும் அண்ணா பஸ் நிலையத்தின் பயன்பாடு குறைந்தது.  இருந்தபோதிலும் தற்போது இங்கிருந்து சோழவந்தான், தனிச்சியம் உள்ளிட்ட சில ஊர்களுக்கு மட்டும் சொற்ப அளவில் டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. 

 ஆனாலும் இந்த பஸ் நிலையத்திற்குள் சென்று பஸ் ஏற பயணிகள் அச்சப்படும் நிலையே காணப்படுகிறது. பஸ்கள் உள்ளே இருந்து புறப்பட்டாலும் பயணிகள் பஸ் நிலையத்தினுள் செல்ல அச்சப்பட்டு, பஸ் நிலையத்திற்கு வெளியே பஸ் ஸ்டாப்பில் நீண்ட நேரம் நின்றே பயணம் செய்து வருகிறது. 

பயணிகளும் அந்தப் பகுதியில் கடை நடத்தி வருவோரும் அச்சப்படும் அளவுக்கு குடிமகன்கள் தொல்லை, சமூக விரோதிகளின் அட்டூழியம் அதிகரித்துள்ளது. பஸ் நிலையத்தின் அருகேயுள்ள மதுபானக்கடையில் இருந்து மதுபானங்களை வாங்கி வந்து பஸ் நிலையத்தினுள் திறந்த வெளியில் மது அருந்துகின்றனர். 

மாவட்ட கலெக்டர் அலுவலகம், தலைமை அரசு மருத்துவமனை, புறக்காவல் நிலையம், அரசு அலுவலகங்கள், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதே என்று துளியளவு அச்சமின்றி  அண்ணா பஸ் நிலையத்தை குடிமகன்கள் திறந்தவெளி பாராக பயன்படுத்தி வருகின்றனர்.  எனவே பஸ் நிலைய வளாகம் உள்ளே புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும். 

இந்த பஸ் நிலையங்களில் இருந்து மருத்துவமனை, மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து செல்லும் பொதுமக்கள், அலுவலர்கள் பயன்பெறும் வகையில் மேலூர், திருப்புவனம், அனுப்பானடி, அவனியாபுரம், கூடல்நகர், அழகர்கோவில்  பகுதிகளுக்கு டவுன் பஸ்களை இயக்க அரசு போக்குவரத்துக்கழக நிர்வாகம் முன்வர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News