உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

விடுமுறை நாட்களிலும் வெறிச்சோடிய தியேட்டர்கள்

Published On 2022-01-19 09:48 GMT   |   Update On 2022-01-19 09:48 GMT
கரூரில் விடுமுறை நாட்களையொட்டி காட்சிகள் அதிகமாக்கப்பட்டபோதிலும் ரசிகர்கள் வராததால் தியேட்டர்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

கரூர்:

கரூர் மாநகரில் 9 திரையரங்குகள் செயல்பட்டு வருகின்றன. கொரோனா பரவலை கட்டுப்படுத் தும் வகையில் கடந்த 6 ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கரூர்  மாநகரில் உள்ள 9 திரையரங்குகளில் இரவு நேர 2 ஆம் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு பகல் நேரங்களில் 3 காட்சிகள் மட்டுமே கொரோனா கட்டுப்பாடு விதிகளை பின்பற்றி திரையிடப்பட்டு வந்தது.

பொங்கல் பண்டிகையையொட்டி புதிய திரைப்படங்கள் கடந்த 13 ஆம் தேதி வெளியானதாலும் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை என்பதாலும் (16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) இரவு  நேர ஊரடங்கு வரும் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதாலும்

கரூரில் உள்ள 7 திரையரங்குகளில் இரவு நேர ஊரடங்கு தொடங்கும் நேரத்திற்கு முன்னதாகவே, காலை 10, மதியம் 1, மாலை 4, இரவு 7 மணி என 4 காட்சிகள் கடந்த 13 ஆம் தேதி முதல் 7 திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகின்றன. அதிக காட்சிகள் மூலம் அதிகளவு பார்வையாளர்கள் திரைப்படங்களை காண்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

   இந்நிலையில், கடந்த 13ம் தேதி 4, 14 ஆம் தேதி 2 என 7 திரையரங்குகளில் 6 புதிய திரைப்படங்கள் திரையிடப்பட்ட நிலையிலும், 13 ஆம் தேதி தொடங்கி (16 முழு ஊரடங்கு நாள் நீங்கலாக) நேற்று வரை 5 நாட்கள் விடுமுறை நாட்கள் என்றப்போதும் புதிய திரைப்படங்கள் வெளியான நிலையிலும், கொரோனா அச்சம், பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகதது காரணமாக போதிய ரசிகர்கள் வருகையின்றி 50 சதவீத இருக்கைகள் கூட திரையரங்குகளில் நிரம்பவில்லை.

இதனால், அதிருப்தி அடைந்த திரையரங்க உரிமையாளர்கள் மீண்டும் இன்று (ஜனவரி 19ம் தேதி) முதல் மீண்டும் காலை 11, மதியம் 2.15, மாலை 6.15 மணி என 3 காட்சிகள் மட்டும் திரையிடவும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
Tags:    

Similar News