உள்ளூர் செய்திகள்
மெட்ரோ ரெயில்

கனமழையால் போக்குவரத்து பாதிப்பு- மெட்ரோ ரெயிலில் ஒரே நாளில் 1.83 லட்சம் பேர் பயணம்

Published On 2022-01-01 08:15 GMT   |   Update On 2022-01-01 09:11 GMT
கனமழை காரணமாக பஸ் போக்குவரத்து முடங்கியதால் புறநகர் மின்சார ரெயில்களில் கூடுதலாக 40 ஆயிரம் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
சென்னை:

சென்னையில் நேற்று முன் தினம் பகலில் திடீரென்று கனமழை பெய்தது. காலை முதலே மழை தூறிக்கொண்டே இருந்தாலும் பகல் 2 மணிக்கு பிறகு மிக கனமழை பெய்தது.

சென்னை மெரினா கடற்கரையில் அதிகபட்சமாக 24 செ.மீட்டரும், நுங்கம்பாக்கத்தில் 21 செ.மீட்டர் மழையும் பெய்தது. இதனால் சில மணி நேரத்தில் சென்னை நகரம் வெள்ளக்காடானது.

சாலைகளில் அதிக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் திடீரென்று வாகன போக்குவரத்து முடங்கியது. சென்னை நகரில் உள்ள அனைத்து சாலைகளிலுமே வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மணிக்கணக்காகியும் நின்ற இடத்தை விட்டு வாகனங்கள் நகரவில்லை.

இதனால் காலையில் அலுவலகத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பியவர்கள் திணறினார்கள். பலர் வாகனங்களை அலுவலகத்திலேயே போட்டு விட்டு மெட்ரோ ரெயில், மின்சார ரெயில்களில் பயணம் செய்தனர். சென்னை விமான நிலையம்-விம்கோ நகர், பரங்கிமலை-சென்ட்ரல் இடையே இயக்கப்படும் மெட்ரோ ரெயில்களில் வழக்கமாக 1.25 முதல் 1.28 லட்சம் பயணிகள் பயணம் செய்தனர்.

கனமழை காரணமாக பஸ் போக்குவரத்து முடங்கியதால் பொதுமக்கள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்தனர். இதனால் மெட்ரோ ரெயிலில் அதிக அளவு கூட்டம் குவிந்தது. நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 321 பேர் பயணம் செய்தனர்.

கடந்த 29-ந் தேதி ஒரு லட்சத்து 28 ஆயிரம் பயணிகள் பயணம் செய்து இருந்த நிலையில், 30-ந் தேதி 30 சதவீதம் பயணிகள் அதிகமாக பயணம் செய்தனர்.

பயணிகளின் வசதிகளை கருத்தில் கொண்டு அங்கு நள்ளிரவு 12 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டன. அன்று மட்டும் சுமார் 6 லட்சம் பயணிகள் மின்சார ரெயில்களில் பயணம் செய்தனர்.

மேலும் புறநகர் மின்சார ரெயில்களிலும் அதிக அளவு மக்கள் பயணம் செய்தனர். அன்று மட்டும் 40 ஆயிரம் பயணிகள் கூடுதலாக மின்சார ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.


Tags:    

Similar News