உள்ளூர் செய்திகள்
சுனாமியில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்திய பாஜகவினர்.

17-வது நினைவுதினம்: சுனாமியில் பலியானவர்களுக்கு பட்டினப்பாக்கம் கடற்கரையில் அஞ்சலி

Published On 2021-12-26 06:01 GMT   |   Update On 2021-12-26 06:01 GMT
காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகில் அ.தி.மு.க. மீனவர் அணி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.
சென்னை:

2004-ம் ஆண்டு இதே நாளில் சுனாமி பேரலை தாக்கி தமிழகம் முழுவதும் கடலோரங்களில் ஏராளமானவர்கள் பலியானார்கள். ஆண்டுகள் 17 ஆனாலும் இது ஆறாத வடுவாக உறவுகளை பறிகொடுத்தவர்களின் நெஞ்சங்களில் நிலைத்து விட்டது.

ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் கடலில் பால் ஊற்றியும், மலர்களை தூவியும், கடற்கரை மணலில் மெழுகுவர்த்திகளை ஏற்றியும் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

அந்த வகையில் சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

பா.ஜனதா மீனவரணி சார்பில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சிக்கு மீனவர் அணி தலைவர் சதீஷ் தலைமை தாங்கினார். தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, நடிகை குஷ்பு ஆகியோர் கடலில் பால் ஊற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

அதைத்தொடர்ந்து சுனாமியில் உயிரிழந்த குடும்பங்களை சேர்ந்த 600 மீனவ பெண்களுக்கு புடவைகளை அண்ணாமலை வழங்கினார். தொடர்ந்து 17-வது ஆண்டாக பா.ஜனதா மீனவர் அணியினர் வழங்கி வருகிறார்கள்.

நிகழ்ச்சியில் பா.ஜனதா பொதுச்செயலாளர் கரு. நாகராஜன், துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, சக்ரவர்த்தி, மாவட்ட தலைவர் காளிதாஸ், சவுந்தர், சண்முகமணி, சுவாமிநாதன், மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் சார்பில் மீனவர் அணி தலைவர் ஜார்ஜ் ராபின்சன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கு.செல்வபெருந்தகை, சி.டி. மெய்யப்பன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகில் அ.தி.மு.க. மீனவர் அணி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.


Tags:    

Similar News