உள்ளூர் செய்திகள்
நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் நிர்மலாதேவி பேசிய காட்சி.

கல்வி வளர்ச்சிக்காக மட்டுமே சமூகவலைதளங்களை பயன்படுத்த வேண்டும்- போலீசார் அறிவுறுத்தல்

Published On 2021-12-22 10:12 GMT   |   Update On 2021-12-22 10:12 GMT
அறிமுகம் இல்லாதவர்கள், பிரண்ட்ஸ் ரெக்வெஸ்ட் கொடுத்தால் அதை, மாணவ, மாணவிகள் ஏற்க கூடாது.
பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள கரடிவாவியில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு செல்போன் மற்றும் சமூக வலைதளங்களின் பயன்பாடு குறித்து விழிப்புணர்வுக் கூட்டம் தலைமை ஆசிரியை அம்சவேணி தலைமையில் நடைபெற்றது. என்.எஸ்.எஸ். திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் முருகேசன் வரவேற்றார். 

இதில் பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் நிர்மலாதேவி கலந்துகொண்டு மாணவ, மாணவிகள் சமூக வலை தளங்களை கல்வி வளர்ச்சிக்காக மட்டும் பயன்படுத்த வேண்டும். அறிமுகம் இல்லாதவர்கள், பிரண்ட்ஸ் ரெக்வெஸ்ட் கொடுத்தால் அதை, மாணவ, மாணவிகள் ஏற்க கூடாது. 

மேலும் வீடியோ கால், வாட்ஸ் ஆப் காலில் பேசுவதை தவிர்க்க வேண்டும். 

பெற்றோரிடம் இருப்பதை விட மாணவ, மாணவிகள் பள்ளிகளில் ஆசிரியர்களுடன் அதிக நேரம் செலவிடுகின்றனர். சட்டத்தை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க கூடிய அதிகாரம் மட்டும் காவல் துறையினரிடம் உள்ளது. 

ஆனால் சட்டத்தை மீறாமல் மாணவ, மாணவியரை நல்வழிப்படுத்தும் பொறுப்பும், கடமையும் ஆசிரியர்களுக்கு உள்ளது .மாணவ, மாணவிகளின் நடத்தையில் மாறுபாடு ஏற்பட்டால் அதை கண்டறிந்து பாலியல் தொந்தரவு போன்ற பிரச்சனைகள் வராமல் ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்.
 
தற்போது சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக நெருங்கிய உறவினர்கள், அக்கம் பக்கம் வசிப்பவர்களால் சிறுமிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். 

போலீசார் குற்றவாளிகளை போக்சோ சட்டத்தில் கைது செய்கின்றனர். 

இருப்பினும் விழிப்புணர்வு வழியாக குற்றங்களை தடுக்க வேண்டும், பாலியல் தொந்தரவு கொடுப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆசை வார்த்தைகள் கூறுவது, பணம், பொருட்கள் வாங்கி கொடுப்பது போன்றவற்றில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

உடலில் கண்ட இடங்களில் தொடும்போது அவர்களை தடுத்து எச்சரிக்க வேண்டும். மீண்டும் கட்டாயப்படுத்தினால் பெற்றோர்களிடம் தெரிவிக்க வேண்டும். 

இவ்வாறு அவர் பேசினார். 

மேலும் போக்சோ சட்டம், அதில் வழங்கப்படும் தண்டனைகள், போலீஸ் நிலையத்தை அணுகுதல், சட்ட உதவி பெறுதல் உள்ளிட்டவை குறித்தும் மாணவிகளுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள்,மாணவிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News