உள்ளூர் செய்திகள்
தேனியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

விடியல் தருவதாக கூறிய ஸ்டாலின் தமிழகத்தை விடியாத மாநிலமாக மாற்றிவிட்டார்- ஓ.பன்னீர்செல்வம்

Published On 2021-12-17 07:18 GMT   |   Update On 2021-12-17 07:18 GMT
மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்த போதும் தி.மு.க. அதன் விலையை குறைக்கவில்லை என தேனியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
தேனி:

தேனி பங்களாமேடு பகுதியில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

அ.தி.மு.க. என்பது தொண்டர்களின் இயக்கமாகும். கட்சியை தோற்றுவித்த எம்.ஜி.ஆர். தொடர்ந்து 3 முறை முதல்வராக இருந்தார். அவர் உயிரோடு இருக்கும் வரை தி.மு.க.வால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. அவரைத் தொடர்ந்து அ.தி.மு.க.வை ராணுவ கட்டுப்பாட்டுடன் ஜெயலலிதா நடத்தி வந்தார்.

கடந்த 32 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் ஆட்சி செய்த கட்சியே மீண்டும் ஆட்சியை பிடித்த வரலாற்றை நிகழ்த்திக் காட்டியவர் ஜெயலலிதா. இது போல மக்களுக்காகவே திட்டங்களை தீட்டி அ.தி.மு.க. செயல்பட்டு வந்தது.

ஆனால் தற்போதைய தி.மு.க. அரசு மக்கள் நலனை பற்றி அக்கறை இல்லாத அரசாக உள்ளது. தேர்தல் காலத்தில் அளித்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முடியாமல் ஸ்டாலின் தடுமாறி வருகிறார். தேனி, திண்டுக்கல் உள்பட தென் மாவட்ட மக்களின் ஜீவாதாரமாக உள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த சட்டப் போராட்டம் மூலம் ஜெயலலிதா நிலை நாட்டி வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை பெற்றுத் தந்தார். ஆனால் கடந்த மாதம் அணையின் நீர் மட்டம் 139 அடியை எட்டிய போதே கேரள மந்திரிகள் அணை பகுதிக்கு சென்று தண்ணீரை திறந்து விட்டனர். இதனை தி.மு.க. அரசு வேடிக்கை பார்த்தது. அ.தி.மு.க போராட்டம் நடத்தியதால் தற்போது முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 142 அடி தேக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. ஆட்சியில் அனைத்து அத்தியாவசிய பொருட்களும் கடுமையாக விலை உயர்ந்து விட்டது. மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்த போதும் தி.மு.க. அதன் விலையை குறைக்கவில்லை. முதியோருக்கு ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் என தெரிவித்து ஏமாற்றி விட்டார். மகளிருக்கு ரூ.1000 வழங்குவதாக கூறி அதைப்பற்றி பேசாமல் மவுனமாக உள்ளார்.

கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என்ற வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. போக்குவரத்து துறை மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. ரேசன் கடையில் வழங்கப்படும் அரிசி உண்ணத் தகுந்த முறையில் இல்லை. மாட்டுக்கு கொடுத்தால் கூட சாப்பிட மறுக்கும் நிலையில் உள்ளது. தி.மு.க. ஆட்சியில் காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

ஆனால் அதைப்பற்றி அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது. ஆட்சிக்கு வந்தால் விடியல் தருவேன் என்று ஊர் ஊராக வாக்குறுதி அளித்த ஸ்டாலின் எந்த திட்டத்தையும் செயல்படுத்தாமல் உள்ளார். இதனால் தமிழகம் தி.மு.க. ஆட்சியில் விடியல் காணாத மாநிலமாக உள்ளது. நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறி இன்னும் அதை பற்றி கண்டுகொள்ளாமல் உள்ளனர்.

அ.தி.மு.க. ஆட்சியில் தோற்றுவிக்கப்பட்ட 11 புதிய மருத்துவக்கல்லூரிகள் மூலம் 5050 மாணவர்கள் மருத்துவ படிப்பு பயின்று வருகின்றனர். மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கியதால் அவர்களும் பயனடைந்துள்ளனர். ஆனால் அ.தி.மு.க.வின் திட்டங்களை தங்களது திட்டம் போல் தி.மு.க. மார்தட்டிக் கொள்கிறது. தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அ.தி.மு.க. தொடர்ந்து போராட்டம் நடத்தும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் தி.மு.க. எங்கு செல்லுமோ அந்த நிலை ஏற்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Tags:    

Similar News