உள்ளூர் செய்திகள்
எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர்செல்வம்

தங்கமணி வீட்டில் சோதனை நடத்துவது பழிவாங்கும் நடவடிக்கை: எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

Published On 2021-12-15 08:30 GMT   |   Update On 2021-12-15 08:30 GMT
பாசறையில் பயின்ற நாங்களும், எங்களின் கழக உடன் பிறப்புகளும், தி.மு.க. அரசின் சலசலப்புகளுக்கு எல்லாம் அஞ்சி விட மாட்டோம் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கூறி உள்ளனர்.
சென்னை:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. உள்கட்சித் தேர்தல் மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும், உற்சாகத்தோடும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த தேர்தலையொட்டி உளவுத்துறையின் மூலம் கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில், அ.தி.மு.க. முன்பைக் காட்டிலும் கூடுதலாக மெருகேற்றிக் கொண்டு பலமூட்டிக் கொண்டு வீறு கொண்டு எழுகிறது என்ற செய்தியை தாங்கிக் கொள்ள முடியவில்லை.



இதனை பொறுத்துக்கொள்ள முடியாத தி.மு.க. அரசு, அரசியல் வன்மத்தையும், தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவும், லஞ்ச ஒழிப்புத்துறையை தன்னுடைய ஏவல் துறையாக மாற்றி, முன்னாள் அமைச்சர் தங்கமணியின் இல்லத்திலும், அவருடைய நண்பர்கள், உறவினர்கள் இல்லங்களிலும் சோதனை என்கின்ற பெயரில் மிகப்பெரிய வெறியாட்டத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

50 ஆண்டுகால அ.தி.மு.க. வரலாற்றில் ஆசி வழங்கி கொண்டிருக்கக் கூடிய இருபெரும் தலைவர்களும் சந்திக்காத சோதனைகள் அல்ல, சந்திக்காத துரோகங்கள் அல்ல, சந்திக்காத வழக்குகள் அல்ல.

அந்த வழியில் அவர்கள் பாசறையில் பயின்ற நாங்களும், எங்களின் கழக உடன் பிறப்புகளும், உங்களுடைய இந்த சலசலப்புகளுக்கு எல்லாம் அஞ்சி விட மாட்டோம். முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடராத வழக்குகளா? எங்களுடைய அம்மா வெற்றி பெறாத வழக்குகளா?

அந்த வழியில், தாய்வழி வந்த சொந்தங்கள் எல்லாம் ஓர்வழி நின்று, நேர்வழி சென்றால் நாளை நமதே என்ற புரட்சித் தலைவரின் வைர வரிகளுக்கு ஒப்பாக, இந்த வழக்குகளை சட்டப்படி சந்தித்து வெற்றிவாகை சூடி, புடம்போட்ட தங்கங்களாக, நெருப்பில் பூத்த மலர்களாக, உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவையாக, நீரில் மிதக்கும் மேங்களாக மீண்டு வருவோம்.

இதுபோன்ற செயல்களில் தி.மு.க. அரசு ஈடுபடாமல் நேர்மறை அரசியலை முன்னெடுத்து, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான முன்னெடுப்பை முனையுங்கள் என்று வலியுறுத்தவும் கடமைபட்டிருக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.


Tags:    

Similar News