search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முன்னாள் அமைச்சர் தங்கமணி
    X
    முன்னாள் அமைச்சர் தங்கமணி

    முன்னாள் அமைச்சர் தங்கமணி மனைவி, மகன் பெயர்களில் ரூ.4.85 கோடி சொத்துக்கள்- எப்போது எங்கே வாங்கினார்?

    முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் அவரது மனைவி பெயரில் ரூ.8 கோடியே 47 லட்சத்து 66 ஆயிரத்து 318 மதிப்பிலான நகைகள், நிலங்களை வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது.
    சென்னை:

    முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று சோதனை நடத்தி வருகிறார்கள்.

    இது தொடர்பாக நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார், தங்கமணி, அவரது மனைவி சாந்தி, மகன் தரணீதரன், மகள் லதாஸ்ரீ ஆகியோர் மீது ஊழல் தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    13/(2), 13/(1) (பி), ஊழல் தடுப்புச்சட்டம், 109 ஐ.பி.சி., 13/(1இ) உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. லஞ்ச ஒழிப்பு போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் தங்கமணியும், அவரது குடும்பத்தினரும் முறைகேடாக வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்தது தொடர்பாக பரபரப்பான தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

    இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் தங்கமணி முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அவரது மகன் தரணீதரன், மகள் லதாஸ்ரீ ஆகியோர் 2-வது குற்றவாளியாகவும், மனைவி சாந்தி 3-வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    தங்கமணி நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் என்றும், அவரது தந்தை மறைந்த பெருமாள் சிறிய அளவில் ஜவுளி தொழிலில் ஈடுபட்டு வந்ததாகவும் எப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தங்கமணி 2006-ம் ஆண்டு திருச்செங்கோடு சட்ட சபை தொகுதியில் இருந்தும், 2011-ம் ஆண்டு குமாரபாளையம் தொகுதியில் இருந்தும் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    2011-ம் ஆண்டில் இருந்து 2012-ம் ஆண்டு வரை வருவாய்த்துறை அமைச்சராகவும், தொழில் ஸ்டீல் மற்றும் கனிமவளத்துறை அமைச்சராகவும் தங்கமணி பொறுப்பு வகித்துள்ளார். 2012-ம் ஆண்டுக்கு பிறகு போக்குவரத்துத்துறை அமைச்சராகவும், மின்துறை, மதுவிலக்கு அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

    இந்த காலகட்டங்களில் தனது அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி பல வழிகளில் முறைகேடாக பணம் சேர்த்து அதன்மூலம் அவர் சொத்துக்களை வாங்கி உள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த காலகட்டங்களில் தனது மனைவி, மகன், மகள் பெயரிலும் தங்கமணி சொத்துக்களை வாங்கி இருக்கிறார். தங்கமணியின் மகன் தரணீதரன் எர்த் மூவர்ஸ் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்த தொழிலுக்கு முறைகேடான வழியில் வருவாய் ஈட்டி அதன்மூலம் சொத்துக்களை வாங்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தங்கமணியின் மனைவி சாந்தி எந்த தொழிலிலும் ஈடுபடாமல் இருந்ததாகவும், அதேநேரத்தில் அவரது பெயரில் கணக்கில் வராத சொத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அமைச்சர் தங்கமணியின் சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள ஆலயம்பாளையம் கிராமம் ஆகும். அவரது மகன் திருமணமாகி மனைவி சாராவுடன் சேலம் சூரமங்கலம் அருகில் உள்ள ராஜாபுரத்தில் வசித்து வருகிறார்.

    மகள் லதாஸ்ரீ திருமணமாகி கணவருடன் பள்ளிபாளையம் அருகே உள்ள கோலியனூர் கிராமத் தில் வசித்து வருகிறார். தங்கமணி அமைச்சராக இருந்தபோது தங்கள் பகுதிகளில் இவர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2016 மற்றும் 2021-ம் ஆண்டு சட்ட சபை தேர்தலில் போட்டியிட்டபோது தங்கமணி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள தகவலின்படி அவர் அதிக அளவில் வருமானத்துக்கு அதிகமாக நகை-பணம், சொத்துக்களை குவித்திருப்பது தெரிய வந்துள்ளது.

    தங்கமணி மற்றும் அவரது மகன் பெயரில் இந்த கால கட்டங்களில் ரூ.1 கோடியே 1 லட்சத்து 86 ஆயிரத்து 17 மதிப்பிலான நகைகள் மற்றும் முதலீடுகள், மோட்டார் வாகனங்கள், விவசாய நிலங்கள் ஆகியவற்றை வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது.

    தங்கமணி மற்றும் அவரது மனைவி பெயரில் ரூ. 8 கோடியே 47 லட்சத்து 66 ஆயிரத்து 318 மதிப்பிலான நகைகள், நிலங்களை வாங்கி இருப்பதும் தெரியவந்துள்ளது.

    தங்கமணியின் தொழில் வருமானம் ரூ.5 கோடியே 24 லட்சத்து 86 ஆயிரத்து 617 அளவுக்கு இருந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

    கோவிந்தம்பாளையம் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் தங்கமணியின் வீடு

    மேல்குறிப்பிட்ட கால கட்டத்தில் தங்கமணி ரூ.2 கோடியே 60 லட்சத்து 8 ஆயிரத்து 282 ரூபாய் அளவுக்கு மட்டுமே (வருவாய்க்கு ஏற்றபடி) சொத்து சேர்த்திருக்க வேண்டும். ஆனால் அவர் சொத்து மதிப்பு ரூ.7 கோடியே 45 லட்சத்து 80 ஆயிரத்து 301 என்கிற அளவுக்கு உயர்ந்துள்ளது.

    இதன்மூலம் தங்கமணியும், அவரது குடும்பத்தினரும் வருமானத்துக்கு அதிகமாக ரூ.4 கோடியே 85 லட்சத்து 72 ஆயிரத்து 19 ரூபாய் அளவுக்கு கூடுதலாக சொத்துக்களை குவித்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்திருக்கிறார்கள்.

    தங்கமணியின் மருமகனான தினேஷ்குமார் தனியார் தொலைக்காட்சியில் பங்குதாரராக இருப்பதாகவும், அதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் பல்வேறு நிறுவனங்களில் பங்குதாரராக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தினேஷ்குமாரின் தந்தை சிவசுப்பிரமணியத்துக்கு சொந்தமாக 100 லாரிகள் ஓடுகிறது. தினேஷ் குமார், ஜெயஸ்ரீ பிளைவுட் ஒர்க்ஸ் நிறுவனத்தின் உரிமையாளராகவும் உள்ளார். ஜெயஸ்ரீ கட்டுமான நிறுவனத்தின் பங்குதாரராக இருந்து வருவதாகவும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


    Next Story
    ×