உள்ளூர் செய்திகள்
தமிழக கவர்னரை சந்தித்த பாஜக நிர்வாகிகள்.

கவர்னருடன் அண்ணாமலை சந்திப்பு- கருத்து சுதந்திரம் பறிக்கப்படுவதாக புகார்

Published On 2021-12-12 08:41 GMT   |   Update On 2021-12-12 08:41 GMT
பா.ஜ.க.வின் 21 நிர்வாகிகள் மீது தி.மு.க. அரசு வழக்கு பதிவு செய்துள்ளதாக கவர்னருடனான சந்திப்புக்கு பின் கரு.நாகராஜன் தெரிவித்தார்.
சென்னை:

கருத்து சுதந்திரம் பறிக்கப்படுவதாக தமிழக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது.

இந்த நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று சந்தித்தார். கிண்டி ராஜ்பவனில் இந்த சந்திப்பு நடந்தது. அவருடன் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சரஸ்வதி, பொதுச்செயலாளர் கரு. நாகராஜன், கராத்தே தியாகராஜன், டால்பின் ஸ்ரீதர், கு.க.செல்வம் சென்று இருந்தனர்.

இந்த சந்திப்பு 40 நிமிடங்களுக்கு மேலாக நடந்தது. அப்போது தமிழக அரசு, பா.ஜ.க. மற்றும் மாரிதாஸ் மீது பொய் வழக்கு போடுவதாகவும் கருத்து சுதந்திரம் பறிக்கப்படுவதாகவும் மாநில தலைவர் அண்ணாமலை கவர்னரிடம் விளக்கி கூறியதாக தெரிகிறது.

தமிழகம் முழுவதும் இன்று போராட்டம் நடந்த நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த சந்திப்பு குறித்து கரு. நாகராஜன் கூறியதாவது:-

தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் கருத்து சுதந்திரம் இல்லை. முதல்-அமைச்சரை பாராட்டினால் இனிக்கிறது. குற்றம் சாட்டினால் கசக்கிறது. தேச தலைவர்களை, தேசத்தை தவறாக பதிவிடும் பதிவுகளை பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

இந்திய தேசத்தை குறை கூறி பதிவு செய்பவர்களுக்கு தி.மு.க. தலைவர்கள் ஆதரவாக பதிவுகளை செய்கின்றனர். பா.ஜ.க.வின் 21 நிர்வாகிகள் மீது இந்த அரசு வழக்கு பதிவு செய்துள்ளது. நியாயமான கருத்துகளை பதிவு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தி.மு.க.வுக்கு எதிரான 300-க்கும் மேற்பட்ட பதிவுகளின் நகல்கள் கவர்னரிடம் வழங்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. அளித்த ஆதாரங்கள் அடிப்படையில் கவர்னர் நடவடிக்கை எடுப்பார் என நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News