உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

காங்கேயம் தாலுகாவில் கிராம உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு

Published On 2021-12-10 09:53 GMT   |   Update On 2021-12-10 09:53 GMT
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தினை வெள்ளைதாளில் எழுதி அனுப்ப வேண்டும்.
காங்கேயம்:

காங்கேயம் தாலுகாவில் காலியாக உள்ள 5 கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தாசில்தார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காங்கேயம் தாசில்தார் பி.சிவகாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுக்காவில் 5 கிராம உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருப்பதுடன், 21 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் நபர் காலிப்பணியிடம் உள்ள சம்பந்தப்பட்ட தாலுகாவில் வசிப்பவராக இருக்க வேண்டும். இரண்டு மனைவிகள் கொண்டவராக இருக்க கூடாது. தகுதியுள்ள நபர்கள் போட்டித்தேர்வின் மூலம் நேரடியாக பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தினை வெள்ளைதாளில் எழுதி அனுப்ப வேண்டும். இதற்கென விண்ணப்ப படிவம் எதுவும் வழங்கப்படமாட்டாது. தகுதி உள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

விண்ணப்பதாரர்கள் தங்கள் விபரங்களை வெள்ளைத்தாளில் எழுதி கல்வித்தகுதி சான்றிதழ்கள் நகல், ரேஷன் கார்டு நகல், வேலைவாய்ப்பக பதிவு நகல், சாதி சான்று நகல், கல்வி மாற்று சான்று நகல், மதிப்பெண் சான்று நகல் ஆகியவற்றை சுய சான்றொப்பம் செய்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

தேவையான சான்றிதழ் இல்லாத விண்ணப்பங்கள் பரிசீலனை நிலையிலேயே நிராகரிக்கப்படும். பரிசீலனையில் விண்ணப்பதாரர் அளித்த தகவல்கள் தவறு என கண்டறியப்பட்டால் அவரது விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் காங்கேயம் தாலுகா அலுவலகத்துக்கு வருகிற 13-ந்தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும். அதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தபால் தாமதங்களுக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News