தமிழ்நாடு

சென்னையில் 33 கால்வாய்களை தூர்வாரும் பணிகள் தொடங்கியது- ஒரு மண்டலத்துக்கு ரூ.50 லட்சம் ஒதுக்கீடு

Published On 2024-05-22 11:03 GMT   |   Update On 2024-05-22 11:03 GMT
  • 4,000 சாலைப் பணியாளர்களை கொண்டு மழைநீர் வடிகால்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.
  • மாநகராட்சியின் 1,480 கிலோமீட்டர் நீளம் மழைநீர் வடிகால்கள் தூர்வாரப்படுகிறது எனவும் சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

சென்னை:

பருவமழையை எதிர் கொள்ள ஏதுவாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 33 கால்வாய்கள் மற்றும் மழைநீர் வடிகால்கள் தூர்வாரும் பணிகள் துவங்கி உள்ளது.

தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் நோக்கில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கால்வாய்கள் நீர்நிலைகள் மற்றும் மழை நீர் வடிகால்களை தூர்வாருதல், ஆகாயத்தாமரை அகற்றி தயார்படுத்தும் பணிகளை சென்னை மாநகராட்சி தொடங்கி உள்ளது.

இதற்காக 15 மண்டலங்களுக்கும் தலா ரூ. 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

நீர்நிலைகளில் மேற்கொள்ளப்படும் பணிகளில் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆம்பிபியன்ஸ், ரோபோடிக் எக்ஸ் கேவேட்டர்கள் மற்றும் மினி-ஆம்பியன்கள் போன்ற நவீன எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ஓட்டேரி நல்லான் கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய், மாம்பலம் கால்வாய், ராஜ்பவன் கால்வாய், பக்கிங்காம் கால்வாய் மற்றும் அடையாறு, கூவம் ஆறுகளிலும் ஆகாயத்தாமரை மற்றும் தூர்வாரும் பணிகள் முன்னுரிமை அடிப்படையில் நடைபெற உள்ளன.

முதல் கட்டமாக ஜூன் 30-க்குள் பணிகள் முடிக்கப்படும். தென்மேற்கு பருவமழைக்குப் பிறகு வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள ஏதுவாக மீண்டும் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டு அக்டோபருக்குள் முடிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

4,000 சாலைப் பணியாளர்களை கொண்டு மழைநீர் வடிகால்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மாநகராட்சியின் 1,480 கிலோமீட்டர் நீளம் மழைநீர் வடிகால்கள் தூர்வாரப்படுகிறது எனவும் சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

Tags:    

Similar News