தமிழ்நாடு

சர்ச்சை.. நடவடிக்கை கடிதம்.. மன்னிப்பு... முடிவுக்கு வந்தது இர்பான் சர்ச்சை வீடியோ விவகாரம்!

Published On 2024-05-22 13:04 GMT   |   Update On 2024-05-22 13:04 GMT
  • தனது மனைவி வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரிவித்து வீடியோ வெளியீடு.
  • கருவில் இருக்கும் பாலினத்தை தெரிவித்ததால் சுகாதாரத்துறை கடிதம் அனுப்பிய நிலையில் மன்னிப்பு கோரினார்.

பிரபல யூடியூபரான இர்பான் 'இர்பான் வியூஸ்' எனும் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். உணவகங்களில் உள்ள உணவுகளை ரிவியூ செய்வதன் மூலம் பிரபலமான இவர் திரைப்பிரபலங்களுடன் உணவருந்தியவாரே நேர்காணல்களும் எடுத்து வருகிறார்.

யூடியூபர் இர்பானுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு தன்னுடைய மனைவி மற்றும் குடும்பத்தோடு சேர்ந்து சமையல் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருக்கும் செய்தியை அவர் தன்னுடைய ரசிகர்களிடமும் பகிர்ந்து கொண்டார்.

இந்நிலையில் யூடியூபர் இர்பான் தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்தார். அதோடு துபாயில் பரிசோதனை செய்து, தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை அறிவித்து யூடியூப்பில் கொண்டாட்ட வீடியோவை வெளியிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

வயிற்றில் இருக்கும் குழந்தை பாலினத்தை பரிசோதனை மூலம் தெரிவிக்கக் கூடாது என சட்டம் உள்ளது. இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. இதனால் சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க 3 பேர் கொண்ட குழுவை நியமித்தது. மேலும், காவல்துறையில் புகார் அளிக்கவும் முடிவு செய்தது. அத்துடன் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியது.

வீடியோ தொடர்பாக கடும் விமர்சனம் எழுந்த நிலையில் வீடியோவை யூடியூப்பில் இருந்து நீக்கினார் இர்பான். தனது மனைவியுடன் துபாயில் உள்ள மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக செல்லும் வீடியோவை மட்டும் நீக்காமல் வைத்திருந்தார்.

விவகாரம் சீரியசாக சென்று கொண்டிருந்த நிலையில், வீடியோ வெளியிட்டதற்காக மன்னிப்பு கோரினார். அத்துடன் இன்று டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இயக்குனரிடம் மன்னிப்பு கடிதம் வழங்கினார். அத்துடன் மன்னிப்பு வீடியோ வெளியிடுவதாகவும் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

மன்னிப்பு கோரியதை அடுத்து இர்பான் மீது நடவடிக்கை எடுக்காமலிருக்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

Tags:    

Similar News