உள்ளூர் செய்திகள்
4 இடங்களில் காமிரா பொருத்தி வனத்துறையினர் கண்காணிப்பு

சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி - 4 இடங்களில் காமிரா பொருத்தி வனத்துறையினர் கண்காணிப்பு

Published On 2021-12-01 06:57 GMT   |   Update On 2021-12-01 06:57 GMT
கோலமாவு மலைப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் குறித்து சம்பந்தப்பட்ட பகுதியில் 4 இடங்களில் கண்காணிப்பு காமிரா வைத்து கண்காணித்து வருவதாக வனத்துறையினர் கூறியுள்ளனர்.

கோவை:

கோவை மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட சுகுணாபுரம் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு தன்னாசி ஆண்டவர் கோவில் உள்ளது.

இந்த கோவில் அருகே கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று படுத்திருந்தது. இதை கண்டு பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். புலி படுத்திருப்பதை ஒருவர் வீடியோவில் பதிவு செய்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதுபற்றி தகவல் அறிந்த வனத்துறையினர் அந்த பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். ஆய்வில் அங்கு சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதேபோல அதன் அருகே உள்ள கோலமாவு மலைப்பகுதியிலும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

இதனால் அந்த பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளை வீட்டுக்கு வெளியே கட்டி வைக்க வேண்டாம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க அந்த பகுதியில் 4 இடங்களில் கண்காணிப்பு காமிராவையும் அவர்கள் பொருத்தி உள்ளனர். இதுபற்றி வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

மதுக்கரை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது வரை கால்நடைகளை சிறுத்தை வேட்டையாடியதாக தகவல்கள் இல்லை.

சம்பந்தப்பட்ட பகுதியில் 4 இடங்களில் கண்காணிப்பு காமிரா வைத்து சிறுத்தை நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகிறோம். சிறுத்தையை அடர் வனத்துக்குள் விரட்டவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த முயற்சி தோல்வி அடைந்தால் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து வேறு இடத்தில் கொண்டு போய் விட அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். சிறுத்தை நடமாட்டம் அந்த பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

Similar News