செய்திகள்
தக்காளி

சில்லறை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.80க்கு விற்பனை-பொதுமக்கள் அதிர்ச்சி

Published On 2021-11-08 08:16 GMT   |   Update On 2021-11-08 08:16 GMT
இரு தினங்களாக அதிகாலை நள்ளிரவில் மழை பெய்து வருவதால் வரத்து மேலும் குறைந்து தற்போது உழவர்சந்தைக்கு 6 டன் தக்காளி மட்டுமே வந்தது.
திருப்பூர்:

திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள தெற்கு உழவர் சந்தைக்கு பொங்கலூர், பல்லடம், கணபதி பாளையம், சம்மந்தம்பாளையம், கொடுவாய், மாதப்பூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து 25 டன் தக்காளி விற்பனைக்கு வரும்.

கடந்த 10  நாட்களாக விட்டுவிட்டு பெய்து வரும் மழையால் தக்காளி வரத்து வெகுவாக குறைந்துள்ளது. கடந்த வாரம் 10 முதல் 15 டன் தக்காளி மட்டுமே வந்ததால் ஒரு கிலோ தக்காளி ரூ.40க்கு விற்றது. தீபாவளியை முன்னிட்டு ஒரு கிலோ தக்காளி ரூ.45க்கு விற்பனையானது.

இரு தினங்களாக அதிகாலை நள்ளிரவில் மழை பெய்து வருவதால்  வரத்து மேலும் குறைந்து தற்போது உழவர்சந்தைக்கு 6 டன் தக்காளி மட்டுமே வந்தது. இதனால் கிலோவுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிலோ ரூ.50க்கு விற்றது.

14 கிலோ கொண்ட பெட்டி மொத்த விலையில் ரூ.600க்கு விற்பனையானது. 28 கிலோ பெரிய பெட்டி ரூ.1,200ஆக இருந்தது. இந்தநிலையில் இங்கிருந்து மொத்தமாக வாங்கி கடைகளில் விற்பனை செய்யும்  சில்லறை வியாபாரிகள் ஒரு கிலோ தக்காளியை ரூ.80க்கு விற்கின்றனர். தங்கம் போல் தக்காளி விலை உயர்வதும் குறைவதுமாக உள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து உழவர் சந்தை அலுவலர்கள் கூறுகையில், ‘உழவர்சந்தைக்கு 3ல் ஒரு பங்கு தக்காளி மட்டுமே வருகிறது. வரத்து 10 டன்னுக்கும் கீழ் குறைந்துள்ளதால் அதற்கேற்ப விலை நிர்ணயிக்க வேண்டியுள்ளது.

நடப்பு வாரத்தில் தொடர் முகூர்த்தம் இருப்பதால் பலரும் தக்காளி வாங்க சந்தைக்கு வருகின்றனர். விற்க தக்காளி இல்லாத சூழலால் விலை உயர்ந்துள்ளது. சின்னரகம் ரூ.40 முதல் ரூ.42க்கும், நடுத்தரம் ரூ.46 முதல் ரூ.48க்கும், முதல் தரம் (பெரியது) ரூ.50க்கும்   விற்கப்படுகிறது என்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில்  ஆடிப்பட்டத்தில் விவசாயிகள் பலர் தக்காளி நடவு செய்தனர். நடவு சீசனின் போது தக்காளிக்கு போதிய விலை கிடைக்கவில்லை. ஒரு டிப்பர் (14 கிலோ) 100 ரூபாய்க்கு விற்றது. தக்காளியில் நஷ்டம் ஏற்பட்ட போதிலும் அறுவடைக்கு வரும் போது மழை காலம் துவங்கி விடும்.

அப்போது தக்காளிக்கு நல்ல விலை கிடைக்கும் என்று விவசாயிகள் ஆடிப்பட்ட சாகுபடியை மேற்கொண்டனர். தற்போது ஆடிப்பட்ட தக்காளி அறுவடை தொடங்கிய நிலையில் இடைவிடாது மழை பெய்து வருகிறது. வயலில் தண்ணீர் தேங்குவதால் பெரும்பகுதி தக்காளி அழுகி வீணாகி விட்டது.

மேலும் பூக்கள் உதிர்ந்து  இலைகள் கருகி விட்டன. காய்ப்புத்திறனை செடிகள் இழந்துள்ளதால் இனி மகசூல் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விளைச்சல் பாதிப்பால் சந்தைக்கு வரும் தக்காளியின் அளவு வெகுவாக குறைந்துவிட்டது.

விவசாயிகள் கூறுகையில், நன்றாக காய்த்த போது விலை இல்லை. தற்போது நல்ல விலைக்கு விற்பனையாகிறது. ஆனால் எங்களிடம் தக்காளி விளைச்சல் இல்லை. இதனால் முதலீட்டை கூட எடுக்க முடியவில்லை. இனி செடிகளை உழவு ஓட்டி அழிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றனர்.
Tags:    

Similar News