செய்திகள்
கொலை

மதுரையில் உருட்டுக்கட்டையால் தாக்கி வாலிபர் கொலை

Published On 2021-07-24 08:51 GMT   |   Update On 2021-07-24 08:51 GMT
மதுரையில் உருட்டுக்கட்டையால் தாக்கி வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை:

மதுரை தத்தனேரியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 38). இவர் குப்பைகளில் கிடக்கும் பிளாஸ்டிக் கவர், பேப்பர்களை சேகரித்து விற்று வந்தார்.

இதற்காக பெரும்பாலும் இரவில்தான் அவர் செல்வது வழக்கம். நேற்று இரவும் வீட்டில் இருந்து சாக்குப்பையுடன் புறப்பட்டு சென்றார்.

இந்த நிலையில் செல்லூர் 50 அடி ரோட்டில் மாரியப்பன் ரத்த காயங்களுடன் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடப்பதாக செல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மாடசாமி, சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். அங்கு தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் மாரியப்பன் கிடந்தார்.

அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

மாரியப்பனை கொலை செய்தது யார்? எதற்காக கொலை நடந்தது? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போது அந்த ரோட்டில் மாரியப்பன் வேறு ஒருவருடன் மது அருந்தியதை சிலர் பார்த்துள்ளனர்.

இதையடுத்து மாரியப்பனுடன் மது அருந்தியது யார்? மது குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள பழைய இரும்புகள் மற்றும் பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதில் நரிமேடு செக்கடி 4-வது தெருவைச் சேர்ந்த செய்யது ஷேக் முகமது (36) என்பவர்தான் மாரியப்பனுடன் மது அருந்தி உள்ளார் என தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் செய்யது ஷேக் முகமது இன்று அதிகாலை செல்லூர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

அப்போது செய்யது ஷேக் முகமது போலீசாரிடம் கொடுத்த பரபரப்பு வாக்கு மூலம் வருமாறு:-

நானும், மாரியப்பனும் ஒரே தொழில்தான் செய்து வந்தோம். ஆனால் ஒரே பகுதிக்கு இருவரும் சென்று வந்ததால் போதிய வருமானம் கிடைக்க வில்லை. நேற்று 2 பேரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினோம்.

அப்போது நீ வேறு பகுதிக்கு சென்று தொழில் செய் என மாரியப்பனிடம் கூறினேன். ஆனால் அவர் கேட்க மறுத்து விட்டார். இதனால் எங்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென மாரியப்பன் என்னை தாக்கினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் அங்கு கிடந்த உருட்டுக்கட்டையால் அவரை தாக்கினேன். இதில் மாரியப்பன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.

இதனால் பயந்துபோன நான் அங்கிருந்து தப்பி சென்று விட்டேன். அதன் பிறகு தான் மாரியப்பன் இறந்து விட்டார் என தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து நான் போலீஸ் நிலையம் வந்து சரண் அடைந்தேன்.

மாரியப்பனை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தாக்கவில்லை. என்னை கேவலமாக பேசியதால் கட்டையால் தாக்கினேன். இதில் அவர் இறந்து விட்டார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News